ADDED : மே 09, 2025 09:41 PM
சென்னை:வரும் கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளுக்கு பின், நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வெளியிடப்பட்டு உள்ள அரசாணை:
அரசு தேர்வு துறையால் நடத்தப்படும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், விடைத்தாளை வாங்கி பார்க்காமல், நேரடியாக மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை இருந்தது.
அதேபோல, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்களை மட்டும் நகல் எடுத்து பார்க்கவும், மறுமதிப்பீடு செய்யவும் அனுமதிக்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டு முதல், தேர்வு முடிவுகளுக்கு பின், நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியானதும், தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, முதலில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதை பெற்று சரிபார்த்த பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.