காசோலை மோசடி வழக்கு; இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை
காசோலை மோசடி வழக்கு; இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை
ADDED : டிச 20, 2025 06:28 AM

சென்னை: 'செக்' மோசடி வழக்கில், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு, தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா' நிர்வாக இயக்குநர்களான லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர், 'பேஸ்மேன் பைனான்ஸ் இந்தியா' என்ற நிறுவனத்திடம், 2016ம் ஆண்டு 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர்.
உறுதி அளித்தபடி, கடன் தொகையை திரும்ப செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து, 48 லட்சத்து 68,000 ரூபாயாக உயர்ந்தது. கடன் தொகைக்காக அளித்த காசோலையும், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதையடுத்து, 'பேஸ்மேன் பைனான்ஸ்' இயக்குநர் ராகுல்குமார், சென்னை 19வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில், லிங்குசாமி, சந்திரபோஸ் ஆகியோருக்கு எதிராக, செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை, மாஜிஸ்திரேட் பி.மகாலட்சுமி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.டி.சதீஷ்ராஜ் ஆஜரானார்.
இந்த வழக்கில், லிங்கு சாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு, தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, 'கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து, 48 லட்சத்து, 68,000 ரூபாயை, வழக்கு தொடர்ந்த நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்.
'இந்த தொகையை கொடுக்காவிட்டால், கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்' என்றார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சட்டப்படி மேல்முறையீடு செய்ய உள்ளதாக, லிங்குசாமி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

