ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் கல்லுாரி கல்வி இயக்குனரகம்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் கல்லுாரி கல்வி இயக்குனரகம்
ADDED : ஜன 30, 2024 12:12 AM
சென்னை: கல்லுாரி கல்வித் துறை இயக்குனராக, முதன்முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
கல்லுாரி கல்வி இயக்குனராக, திருவாரூர் அரசு கல்லுாரி முதல்வர் கீதா, கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவரை திருவாரூர் கல்லுாரி பணிக்கே அரசு மாற்றியுள்ளது.
அவருக்கு பதிலாக, சேலம் மாவட்ட கலெக்டராக இருந்த கார்மேகம், கல்லுாரி கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக இப்பொறுப்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இதற்கான சிறப்பு அரசாணையை, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். தற்காலிகமாக இந்த நிலை உயர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஒரு ஆண்டுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், கல்லுாரி கல்வி இயக்குனரகம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, கல்லுாரி கல்வி இயக்குனராக, கார்மேகம் நேற்று பொறுப்பேற்றார்.