குண்டாஸ் போட்டவருக்கு இயக்குனர் பதவி: விவசாயிகள் அதிருப்தி
குண்டாஸ் போட்டவருக்கு இயக்குனர் பதவி: விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜன 29, 2024 06:35 AM
சென்னை: விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகிக்க காரணமாக இருந்த அதிகாரிக்கு, வேளாண் இயக்குனர் பதவி வழங்கியதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய, 20 விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், ஏழு பேர் மீது மாவட்ட கலெக்டர் முருகேஷ் பரிந்துரைப்படி, குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
குண்டர் சட்டம் போட காரணமான மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், வேளாண்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட காரணமான அதிகாரியை, துறையின் முக்கிய பதவியில் நியமித்துள்ளது, விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், 'வேளாண் இயக்குனராக முருகேஷ் பதவி ஏற்கும் நாள், விவசாயிகளின் கருப்பு தினம்.
'அன்றைய தினம் வேளாண் இயக்குனர் அலுவலகம் முன், கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும்' என, தெரிவித்துள்ளார். இதுபோல, பல்வேறு சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.