அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதம் மாற்றுத்திறனாளிகள் ஈரோட்டில் துவக்கம்
அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதம் மாற்றுத்திறனாளிகள் ஈரோட்டில் துவக்கம்
ADDED : நவ 18, 2025 01:20 AM
ஈரோடு, வீடு கட்ட தடையாக உள்ள அதிகாரிகளை கண்டித்து, ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
வீட்டுமனை பட்டா வழங்கியும், வீடு கட்ட அதிகாரிகள் முறையான பணி செய்யாமல் அலட்சியம் செய்வதாகவும், தடையாக இருப்பதாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில் அறிவித்தனர். இதன்படி ஈரோட்டில் நேற்று காலை, கொங்கு கலையரங்கம் முன் உண்ணாவிரதத்தை துவக்கினர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, சென்னிமலை பி.டி.ஓ.,க்கள் தங்கமணி, பாலு பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த, 6, 7 ஆண்டாக முயற்சி செய்தும், நான்கு மாதத்துக்கு முன் மீண்டும் முயற்சித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பணி செய்ய வேண்டிய பி.டி.ஓ.,க்களை போனில் தொடர்பு கொண்டால், போனைக்கூட எடுப்பதில்லை என மாற்றுத்திறனாளிகள் வறுத்தெடுத்தனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
இதுகுறித்து துரைராஜ் கூறியதாவது: சித்தோடு நல்லகவுண்டன்பாளையத்தில், புத்துார் புதுப்பாளையம் ஆகிய இடங்களில், 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினர். புத்துார் புதுப்பாளையத்தில் இடம் சரியில்லை என்று, வேறிடம் தருவதாக கூறினர். இதுவரை அவ்விடமும் தரவில்லை. வீடு கட்ட தொடர்ந்து முயற்சித்தும், இதுவரை திட்ட வரைவு கூட அனுப்பவில்லை. அதிகாரிகள் எங்களை புறக்கணிக்கின்றனர். எங்களுக்கான திட்ட வரைவு, நிதி ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம். இவ்வாறு கூறினார்.
நாளை வரை ஈரோட்டிலும், அன்றிரவு சென்னைக்கு புறப்பட்டு சென்று, 19ம் தேதி முதல் சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகம் முன்பும், தினமும் சென்னையில் வெவ்வேறு இடங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்று
அறிவித்துள்ளனர்.
ஒத்திவைப்பு
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன், உண்ணாவிரத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியின் உதவியாளர் சேகர் பேச்சுவார்த்தை நடத்தினார்.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். இதனால் வரும், 26ம் தேதி வரை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக, மாற்றுத்திறனாளிகள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

