சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வு நடத்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வு நடத்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ADDED : நவ 13, 2025 02:04 AM

சென்னை: சென்னை, காமராஜ் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரகத்தின் முன் நடந்த போராட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் அசோக்பாலன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், அரசு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க, கடந்த 31ம் தேதி அரசாணை வெளியானது.
இதில், ஏற்கனவே வெளியிடப் பட்டிருந்த, அரசாணை எண் 151 மற்றும் 20க்கு பதிலாக, இந்த அரசாணை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; இது கண்டனத்திற்கு உரியது.
அரசாணை எண் 151 மற்றும் 20, அரசு துறையில், இரண்டு ஆண்டுகள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளை, நேரடி ஊதிய முறைக்கு மாற்றுவது மற்றும் குரூப் ஏ, பி, சி, டி ஆகிய துறைகளில், மாற்றுத்திறனாளிகளை சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வு வழியே நிரப்புவதற்கான பரிந்துரைகளாகும்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், 'கடந்த 2023ல் அரசு துறைகளில் உள்ள மொத்த பணியிடங்களில், மாற்றுத்திறனாளிகள் பணி செய்ய ஏதுவாக உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அவை சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வு வழியே ஓராண்டிற்குள் நிரப்பப்படும்' என, முதல்வர் அறிவித்தார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், அரசாணை 24ஐ வெளியிட்டு, அரசு பெரும் துரோகம் இழைத்துள்ளது.
இது போன்ற பயனற்ற அரசாணையை உடனடியாக அதிகாரிகள் நீக்கி, பழைய அரசாணை எண் 20ன் படி, சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

