ADDED : மார் 27, 2025 11:39 PM
சென்னை:தேசிய பார்வையற்றோர் இணையம், தமிழ்நாடு கூட்டமைப்பு சார்பில், 10 நாட்களாக நடத்தப்பட்டு வந்த காத்திருப்பு போராட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறைவு செய்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு வேலை வழங்குதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை அலுவலகம் முன், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கடந்த 17ம் தேதி முதல், 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலருடன் பேச்சு நடத்தினர். எனினும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் பொதுச்செயலர் பாபு எழில்குணாளன் கூறுகையில், ''10 நாட்களாக போராடியும் உரிமைகள் மறுக்கப்படுவது வேதனையாக உள்ளது.
''அதிகாரிகளின் அலட்சியம், காவல்துறையின் அடக்குமுறை என, பலகட்ட இன்னல்களுக்கு இடையே போராட்டம் நடந்தது.
''பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, கூடுதல் கவனம் தர இயலாது எனக்கூறும் அதிகாரிகளை கண்டித்து, எங்கள் உரிமைகளை பெறும் வகையில், விரைவில் அடுத்தகட்ட போராட்டத்தை துவக்க உள்ளோம்,'' என்றார்.

