வெள்ள நிவாரணத்தில் பாகுபாடு: பா.ம.க., அன்புமணி குற்றச்சாட்டு
வெள்ள நிவாரணத்தில் பாகுபாடு: பா.ம.க., அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : டிச 09, 2024 04:51 AM

திருக்கோவிலுார் : ''கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலையில் வெள்ள நிவாரண தொகை வழங்குவதில் பாகுபாடு பார்ப்பது இப்பகுதி மக்களுக்கு செய்யும் துரோகமாக பார்க்கிறேன்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேவனுார் பகுதியில் பா.ம.க., சார்பில் நேற்று நடந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்து, அவர் சிகிச்சை அளித்தார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவர்கள், செவிலியர்களை கொண்டு மருத்துவம் செய்து வருகிறோம். அரசு செய்ய வேண்டியதை நாங்கள் செய்கிறோம். வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலில் வயிற்றுப்போக்கு ஏற்படும், பின் மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படும். எனவே, அரசு வேகமாக செயல்பட வேண்டும்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் அரசாங்கத்தின் மெத்தனத்தால் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். சென்னையில் புயல் வந்தபோது அவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுத்தனர்.
மழைக்கு தொடர்பில்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டது. அதேபோல் துாத்துக்குடியிலும் 6,000 ரூபாய் கொடுத்தனர். ஆனால் கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு 2,000 ரூபாய் கொடுக்கின்றனர். இது, இந்த பகுதி மக்களுக்கு செய்யும் துரோகம்.
சாத்தனுார் சம்பவம், செம்பரம்பாக்கம் சம்பவத்தை விட மோசமானது. அரசாங்கத்தின் அலட்சியத்தால் 20 பேர் இறந்துள்ளனர்.
இதற்கு முழு பொறுப்பை, முதல்வர் ஸ்டாலின் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.