யு டியூபர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு கோரிய மனு நிராகரிப்பு
யு டியூபர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு கோரிய மனு நிராகரிப்பு
ADDED : செப் 22, 2024 01:07 AM
சென்னை:பத்திரிகையாளர்கள், யு டியூபர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு அமர்வு ஏற்படுத்தக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'பத்திரிகையாளர்கள், யு டியூபர்கள், பொது பிரச்னை மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை, அதிகாரத்தில் இருப்பவர்கள் நெருக்கடிக்கு ஆளாக்குகின்றனர்.
'சவுக்கு சங்கர் உள்ளிட்ட யு டியூபர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. எனவே, இவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு அமர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்' என்று, கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விபரம் இல்லை
பின், முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
குறிப்பிட்ட வகையிலான வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கும் முன், பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டியுள்ளது. பத்திரிகையாளர்கள், யு டியூபர்கள், பொதுநலவாதி களுக்கு எதிராக, கணிசமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மனுதாரர் தெரிவிக்கவில்லை.
நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையையும், எத்தனை ஆண்டு களாக நிலுவையில் உள்ளன என்பதையும், அவர் தெரிவிக்கவில்லை.
இதுபோன்ற வழக்குகளை அனுமதித்தால், சமூகத்தில் உள்ள மற்ற பிரிவினரும், தங்களுக்காக சிறப்பு அமர்வு ஏற்படுத்தக் கோருவர்.
இதுமாதிரியான வழக்குகளை ஊக்குவித்தால், தங்கள் வழக்கை யார் முடிவு செய்வது என்பதை வழக்காடிகள் தேர்ந்தெடுப்பதற்கு வழிவகுத்து விடும். இந்த வழக்கு, நேரத்தை வீணடிக்க தொடுக்கப்பட்டது.
பொதுநல வழக்கு தொடுப்பவர்கள், உரிய ஆய்வை மேற்கொண்டு, ஆதாரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும். உறுதியற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடரப்படும் பொதுநல வழக்கில், சிறப்பு அமர்வு ஏற்படுத்த முடியாது.
மேலும், சிறப்பு அமர்வு ஏற்படுத்தும்படி, பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்கள் யாரும், நீதிமன்றத்தின் கதவை தட்டவில்லை.
உரிமைகள் தெரியும்
மனுவில் கூறப்பட்டு உள்ள சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர், அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டு உள்ள உத்தரவாதங்கள் தெரியாதவர்கள் அல்ல. அவர்களுக்கு தங்களின் உரிமைகள் தெரியும்.
மேலும், பொத்தாம் பொதுவாக, மனுவில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகளை உறுதிசெய்ய, போதிய ஆதாரங்கள் மனுதாரர் வசம் இருந்தால், வேறுவழியில் நிவாரணம் தேடிக் கொள்ளலாம். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.