அரிசி கடத்தலுக்கு உதவும் ரேஷன் ஊழியர்கள் டிஸ்மிஸ்?
அரிசி கடத்தலுக்கு உதவும் ரேஷன் ஊழியர்கள் டிஸ்மிஸ்?
ADDED : மே 24, 2024 04:27 AM

சென்னை : ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போகும் ரேஷன் கடை ஊழியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய, கூட்டுறவு மற்றும் உணவு துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் மாதம், 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு இலவசமாக அரிசி, கோதுமையும்; மானிய விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயிலும் வழங்கப்படுகின்றன. உணவு மானியமாக ஆண்டுக்கு, 10,500 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
பல அரிசி கார்டுதாரர்கள், அரிசி தவிர்த்த மற்ற பொருட்களை வாங்குகின்றனர். அவர்களுக்கு உரிய அரிசியை விற்றது போல் சில ரேஷன் கடைகள், விற்பனை முனைய கருவியில் பதிவு செய்து, வியாபாரிகள், பிற மாநிலத்தவர்களிடம் விற்கின்றனர்.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கார்டுதாரர்களுக்கு உரிய பொருட்கள் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன; எந்த பொருட்களை வாங்க வேண்டும், வாங்கக் கூடாது என்பது அவர்களின் விருப்பம்.
சிலர் அரிசி வாங்குவதில்லை; ஆனால், அவர்களிடம் அரிசி விற்றது போல் பதிவு செய்து, தவறு செய்கின்றனர்.
கடைகளில் உள்ள பதிவை விட இருப்பு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. சிலர் அந்த அபராதத்தையும் செலுத்தி, தவறு செய்கின்றனர்.
எனவே, கடைகளில் ஆய்வுக்கு செல்லும் போது அடிக்கடி புகாருக்கு உள்ளாகும் ஊழியர்களின் விபரம் அடங்கிய பட்டியல் தயாரித்து, அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரிசி கடத்தலில் பிடிபடும்பட்சத்தில் நடத்தப்படும் விசாரணையில், அதில் ரேஷன் ஊழியருக்கு தொடர்பு இருப்பது உறுதியானால், அவர்கள் மீது இடமாறுதல், அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைக்கு பதில், நிரந்தர பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.