ஓட்டுப்பதிவு இயந்திர அறையில் டிஸ்ப்ளே கோளாறு: ஈரோடு கலெக்டர் விளக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திர அறையில் டிஸ்ப்ளே கோளாறு: ஈரோடு கலெக்டர் விளக்கம்
ADDED : ஏப் 30, 2024 12:26 PM

ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என எழுந்த புகாருக்கு, 'ஓட்டுப்பதிவு இயந்திர அறையில் வைக்கப்பட்டுள்ள டிஸ்ப்ளே தான் கோளாறு, சிசிடிவி கேமராக்கள் பழுது ஏதுமின்றி செயல்பட்டது'' என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விளக்கமளித்தார்.
நீலகிரியில் சமீபத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் எழுந்தது. அடுத்த ஓரிரு நாளில் ஈரோடு தொகுதியிலும் இதே பிரச்னை எழுந்தது. சித்தோடு அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் சிறிது நேரம் இயங்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அளித்த விளக்கம்: சித்தோடு அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்க்கு வரும் சிசிடிவி ஒயர் இணைப்பில் பழுது ஏற்பட்டது. இதனால் அங்கு வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் டிஸ்ப்ளே தெரியவில்லை. தொழில்நுட்ப கோளாறால் காலை 7 மணி அளவில் பழுது ஏற்பட்ட நிலையில் 9 மணிக்கு சரிசெய்யப்பட்டது. சிசிடிவி கேமராக்கள் பழுது ஏதுமின்றி செயல்பட்டது; டிஸ்ப்ளே மட்டும் தான் தெரியவில்லை. இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.

