தரமற்ற அரசு கட்டுமானம்; கட்டி ஓராண்டு மட்டுமே ஆச்சு; தொட்டாலே உதிர்ந்து விழும் பூச்சு!
தரமற்ற அரசு கட்டுமானம்; கட்டி ஓராண்டு மட்டுமே ஆச்சு; தொட்டாலே உதிர்ந்து விழும் பூச்சு!
UPDATED : அக் 27, 2024 12:13 PM
ADDED : அக் 26, 2024 10:06 AM

சென்னை: சென்னை மூலக்கொத்தளத்தில் 138.29 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நகர்ப்புற வாரிய குடியிருப்புகள், திறப்பு விழா கண்ட ஒரே ஆண்டில், தொட்டால் உதிர்வதாகவும், மோசமான நிலையில் கட்டடம் மற்றும் கட்டமைப்புகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டி, குடியிருப்புவாசிகள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ராயபுரம் மண்டலத்தில், மூலக்கொத்தளம் சுடுகாடை ஒட்டி உள்ள ராம்தாஸ் நகர், பிரிவில் தோட்டம் பகுதியில், 200க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வசித்தனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அதே இடத்தில் வீடு கட்டித்தர வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மூலக்கொத்தளம் சுடுகாடிற்கு, 35 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், மயானத்திற்கான 23 ஏக்கர் நிலம் போக, காலியாக இருந்த 12 ஏக்கர் நிலத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 138.29 கோடி ரூபாய் செலவில், 13 மாடியில் 1,044 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
சி.எம்.டி.ஏ., அனுமதி
கடந்த 2018ல், அ.தி.மு.க., ஆட்சியில், 138 கோடியில் துவக்கப்பட்ட இப்பணி, 2020ல் முடிந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ., கட்டடத்திற்கு குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்பு வழங்காததால், வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இரண்டு ஆண்டுகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ., அனுமதி பெறப்பட்டது. குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்புகள், மின்துாக்கி, சுற்றுச்சுவர் வசதிகள் செய்யப்பட்டன. இந்த கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் 2023 ஜூலையில் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அப்போது திறக்கப்பட்ட குடியிருப்பில், தொகை அதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறி, ராமதாஸ் நகர், பிரிவில் தோட்டத்தில் வசித்தவர்கள் செல்ல மறுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பில் ஒவ்வொரு பயனாளிக்கும் வசூலிக்கும் 4.70 லட்சம் ரூபாய்க்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும், அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே தங்களால் வழங்க முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். அதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஏற்றது.
குற்றச்சாட்டு
இதையடுத்து, ராம்தாஸ் நகர், பிரிவில் தோட்டம் பகுதிவாசிகள், 335 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் தற்போது, 'ஜி, ஹெச் மற்றும் ஐ' பிளாக்குகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திறப்பு விழா கண்ட ஓராண்டிலேயே, கையால் தொட்டாலே உதிரும் அளவிற்கு சிமென்ட் பூச்சு நிலை மாறியுள்ளது. பி.வி.சி.,யில் போடப்பட்ட ஜன்னல், கதவுகள் உடைந்துள்ளன. பல வீடுகளில் கதவுகளே பொருத்தப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் கசியும் மழைநீர், கண்டமேனிக்கு தொங்கும் மின் ஒயர்கள், பழுதடைந்த 'லிப்ட்' என, குடியிருப்பின் நிலை மோசமாக மாறியுள்ளது. கட்டடத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. ஒரு 'பிளாக்'கிற்கு இரண்டு 'லிப்ட்' உள்ளது. அதில், ஒரு 'லிப்ட்' மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதில் நான்கு பேருக்கு மேல் ஏறினால் 'லிப்ட்' அறுந்து விழுந்து விடும் என, ஆப்பரேட்டர்கள் எச்சரிப்பதாக குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.
இதனால் குடியிருப்புவாசிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டனர். விரைந்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், வீடுகளின் தரத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், ஐ.ஐ.டி., அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அப்போது, வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரசம் பேசியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
மின்சாரம், குடிநீர், கதவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. 'லிப்ட்' இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை. குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. கீழே இருந்து 4, 5 மாடிகளுக்கு ஏறி குடங்களில் தண்ணீர் கொண்டு செல்கிறோம். மேல்தளத்தில் ஓட்டை விழுந்து கீழ் தளத்தை பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலை உள்ளது.
ஆர்.ராஜசேகர், 40, குடியிருப்புவாசி.
சான்றிதழ் இல்லாததால் வீடுகள் தர மறுப்புஇது குறித்து மூலக்கொத்தளம், பிரிவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த டி.அம்மு, 48, கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கிறேன். 30 ஆண்டுகளுக்கு முன் கணவர் பிரிந்து சென்றார். கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் வாங்க முடியாததால் வீடு கிடைக்கவில்லை. பல துறைகளில் அலைந்தும் சான்றிதழ் வாங்க முடியவில்லை. இதுபோல விதவை சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் இல்லாததால், 50க்கு மேற்பட்டோருக்கு வீடு ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைந்து வீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.