ரூ.3,000 செலுத்தி 200 முறை பயணம் 'பாஸ்' வினியோகம் துவக்கம்
ரூ.3,000 செலுத்தி 200 முறை பயணம் 'பாஸ்' வினியோகம் துவக்கம்
UPDATED : ஆக 14, 2025 01:32 AM
ADDED : ஆக 14, 2025 12:47 AM

சென்னை, ஓராண்டுக்கு 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, 200 சுங்கச்சாவடிகளில் பயணிப்பதற்கு, 'பாஸ்' வழங்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவக்கி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள், 3,000 ரூபாய் பாஸ் வாங்கினால், ஓராண்டில், 200 சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும்.
இந்த திட்டத்தை, நாளை முதல் செயல்படுத்த உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து இருந்தார். அதன்படி, நாளை முதல் இந்த திட்டம் நடை முறைக்கு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், 'ராஜ்மார்க் யாத்ரா' மொபைல் செயலி மற்றும் இணையதளம் வாயிலாக, பாஸ் வழங்கும் பணி நேற்று துவங்கியது.
கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே, இந்த பாஸ் செல்லுபடியாகும். சரக்கு வாகனங்கள், வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு இது பொருந்தாது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மட்டுமே, இந்த பாைஸ பயன்படுத்தி பயணிக்க முடியும்.
மொபைல் போனில், ராஜ்மார்க் யாத்ரா செய லியை பதிவிறக்கம் செய்து, அதில், மொபைல் போன் எண், வாகனப் பதிவு எண், பாஸ்டேக் ஐ.டி., உள்ளிட்டவற்றை பதிவு செய்யவேண்டும்.
பின்னர், 'ஆன்லைன்' வாயிலாக, 3,000 ரூபாய் செலுத்தி, கணக்கை துவக்கி கொள்ளலாம்; அதற்கான ரசீதையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். கணக்கு துவங்கியதை உறுதிப்படுத்தும் வகையில், தொடர்புடைய மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.