விடுமுறை நாட்களில் கூட்டம் நடத்தாதீங்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவு
விடுமுறை நாட்களில் கூட்டம் நடத்தாதீங்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவு
ADDED : டிச 02, 2024 02:31 AM
சென்னை: மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பிஉள்ள கடிதம்:
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவசர காலங்களில், காவல் உதவியை பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
போதுமான மின் விளக்குகள், நோயாளிகள், வெளிநபர்கள் நுழைவதை முறைப்படுத்துதல், சுற்றுச் சூழல், இரவு காவலர் நியமனம் உள்ளிட்ட பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்த வேண்டும்.
அவசர நிலையை தவிர, மற்ற நேரங்களில், அலுவலகம் நேரம் கடந்தோ, விடுமுறை நாட்களிலோ கூட்டம் நடத்தக்கூடாது. அனைவரும் நாகரிகமாக, கண்ணியத்தோடு நடத்தப்பட வேண்டும்.
தவிர்க்க இயலாத நிகழ்வுகள் தவிர்த்து, தேவையின்றி அறிக்கைகள், பணி விபர அறிக்கை போன்றவற்றை, பணியாளர்களிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். பொது சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றும் அனைவரும், முக பதிவு அடிப்படையில், வருகை பதிவு செய்ய வேண்டும்.
துணை சுகாதார நிலையங்களை பொறுத்தவரை, குடியிருப்பு பகுதிக்கான மின்கட்டணத்தை மட்டும், சம்பந்தப்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் செலுத்தினால் போதும். நிலைய கட்டடங்களுக்கான மின்கட்டணத்தை, அவர்கள் செலுத்த தேவையில்லை. அதை அரசின் நிதி ஒதுக்கீட்டில் செலுத்த வேண்டும்.
மேலும், இத்துறையின் செயல்படுத்தப்படும் எந்த பணிகளுக்கும், மருத்துவ அலுவலர்களோ, களப்பணியாளர்களோ, அமைச்சு பணியாளர்களோ, தங்களது சொந்த பணத்தை செலவிட தேவையில்லை.
இவை, தேசிய நலவாழ்வு திட்டத்தில் மேற்கொள்ளப்படும். அரசின் திட்டங்கள் சிறப்போடு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் யாரும் ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.