தீபாவளி எதிரொலி ஞாயிறு, திங்களில் டாக்டர்களுக்கு கட்டாய 'டூட்டி'
தீபாவளி எதிரொலி ஞாயிறு, திங்களில் டாக்டர்களுக்கு கட்டாய 'டூட்டி'
ADDED : அக் 16, 2025 01:59 AM
சென்னை: 'தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் டாக்டர்கள் பணியில் இருப்பது அவசியம்' என, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுதும் தீபாவளி பண்டிகை, வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. பட்டாசுகளால் ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க, அனைத்து துணை சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் அவசர காலங்களை கையாளும், குறிப்பாக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:
கிராமங்களில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் தீபாவளி நாளில் இயங்கும். குறிப்பாக, சிறிய அளவிலான காயங்களுக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளித்து, தேவைக்கு ஏற்ப, '108' ஆம்புலன்ஸ் வாகனத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஞாயிறு, திங்கள் கிழமைகளில், 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பர். அத்துடன், தொலைதுார மற்றும் மலைக் கிராம மக்களுக்காக, 420 நடமாடும் வாகன மருத்துவ சிகிச்சை மையமும் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.