தீபாவளியை கொண்டாட காரில் ஊருக்கு போகிறீர்களா? சென்னை போலீஸ் முக்கிய அறிவிப்பு
தீபாவளியை கொண்டாட காரில் ஊருக்கு போகிறீர்களா? சென்னை போலீஸ் முக்கிய அறிவிப்பு
UPDATED : அக் 21, 2024 03:23 PM
ADDED : அக் 21, 2024 03:15 PM

சென்னை: தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு காரில் செல்பவர்கள் எந்த வழித்தடத்தை பயன்படுத்த வேண்டும் என்று சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை அக்.31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான நாள் நெருங்கி வருவதால் சென்னை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், இனிப்பகங்களில் மக்கள் குவிய ஆரம்பித்துள்ளனர். தலைநகர் சென்னை தவிர்த்து மற்ற நகரங்களிலும் மக்கள் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாட ஏராளமான மக்கள் திட்டமிட்டு உள்ளனர். ரயில்கள், பஸ்களில் இப்போது டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். டிக்கெட் கிடைக்காதவர்கள் கார்களில் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க முடிவு செய்துள்ளனர்.
அவர்களுக்காக சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் பாதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதற்கு பதிலாக, திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு பயணிக்கலாம். இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தவிர்த்து, பயணத்தை இனிதாக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருக்கிறது. பொதுமக்கள் இந்த அறிவுரையை பின்பற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

