சென்னையில் தீபாவளி பண்டிகை கண்காணிப்பில் 18,000 போலீசார்!
சென்னையில் தீபாவளி பண்டிகை கண்காணிப்பில் 18,000 போலீசார்!
ADDED : அக் 18, 2025 07:02 AM

சென்னை; சென்னையில் தீபாவளி பண்டிகைக்காக பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் முக்கிய நகரான சென்னையில் புத்தாடைகள், பரிசு பொருட்கள், இனிப்புகள் வாங்க மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். குறிப்பாக, தி. நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தற்போது தீபாவளி பண்டிகைக்கான கண்காணிப்பிலும் கூடுதலாக கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அதிக மக்கள் கூடும் இடங்களாக திகழும், தி.நகர், புரசைவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கூடுதலாக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகம் காணப்படும் பகுதிகளில் வழக்கமான உடையில் இல்லாமல் சாதாரண உடைகளில் மக்களோடு மக்களாக கலந்தும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எல்இடி திரையின் மூலம் மக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 18,000 போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.குற்றத்தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
பட்டாசுகள் விற்பனை கடைகளிலும் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டு, அவை பின்பற்றப்படுகின்றனவா என்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.