தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பு அரசு விதிமுறைகள் அறிவிப்பு
தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பு அரசு விதிமுறைகள் அறிவிப்பு
ADDED : அக் 26, 2024 08:30 PM
சென்னை:உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான முறையில், உணவு பொருட்களை தயாரிக்க வேண்டும். பாக்கெட்டுகளில், காலாவதி தேதி, தயாரிக்கப்படும் இடம் உள்ளிட்டவை இடம் பெற்றிருத்தல் அவசியம்.
வெளிப்புற கிடங்குகளில் வைத்து தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளுக்கு, உணவு பாதுகாப்பு துறையில் முறையாக, 'லைசன்ஸ்' பெற வேண்டும்.
சமையல் எண்ணெய்யை அதிகபட்சமாக, ஒருமுறை மட்டுமே சூடாக்க வேண்டும். அதில், மேலும் புதிய எண்ணெய்யை சேர்த்து, மீண்டும் மீண்டும் சூடேற்றி, பயன்படுத்தக் கூடாது. இனிப்பு, கார வகைகளில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். தேவையற்ற நிற மூட்டிகளை சேர்க்கக் கூடாது.
பால் ஸ்வீட்களை, பால் அல்லாத பொருட்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களுடன் சேர்த்து, பாக்கெட் செய்து விற்க கூடாது. 'ஸ்வீட் கிப்ட் பாக்ஸ்'களிலும் விபரச்சீட்டுகள் இருக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவு பொருட்களின் தரத்தில் குறைபாடு இருந்தால், 94440 42322 என்ற 'வாட்ஸாப்' எண்ணில் மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.