பேச தெரியாம பேசி மாட்டிக்கிட்டாங்க கஸ்தூரி! ஆதரவு தெரிவித்த பிரேமலதா
பேச தெரியாம பேசி மாட்டிக்கிட்டாங்க கஸ்தூரி! ஆதரவு தெரிவித்த பிரேமலதா
ADDED : நவ 20, 2024 08:34 AM

திருவள்ளூர்; என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி நடிகை கஸ்தூரி மாட்டிக் கொண்டு விட்டார் என்று தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
திருவள்ளூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது; நுணலும் தம் வாயால் கெடும் என்பது போன்று அவரே அவரது வாயால் பேசி மாட்டிக்கிட்டாங்க. பேச தெரியாமல் பேசி மிக பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டார். அவர் பெண் என்ற போதிலும் அவதூறாக பேசியது உண்மையில் கண்டிக்கத்தக்கது.
ஆனால், அவர் ஒரு பெண். எத்தனையோ தலைவர்கள் என்னன்னவோ பேசி இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கைது பண்ணாத இந்த அரசு, எதுக்காக கஸ்தூரியை மட்டும் இவ்வளவு தூரம் வன்மம், வன்மமாக கைது செய்தது. நீதிபதியிடம் அவர் மன்னிப்பு கேட்கிறார்.
அதற்கு பின்னரும் ஹைதராபாத் சென்று கைது பண்ணி கொண்டு வந்திருக்கின்றனர். அவர் மீது கடுமையான சட்டம் பாய்ந்திருப்பது உண்மையிலே வேதனையான விஷயம். ஒரு பெண்ணாக கஸ்தூரிக்கு நடந்தது அநியாயம் என்பதை நான் பதிவு செய்கிறேன். வெகு விரைவில் அவர் வெளியே வரணும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் காலம் இருக்கிறது. கூட்டணி பற்றியும், எந்த கட்சிகள் கூட்டணிக்கு வருகின்றன என்பது பற்றி இப்போது கூறமுடியாது. உள்ளாட்சித் தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் தே.மு.தி.க., போட்டியிட தயாராக உள்ளது. இவ்வாறு பிரேமலதா கூறினார்.