தி.மு.க., -- எம்.எல்.ஏ., மீதான பணப்பட்டுவாடா வழக்கு ரத்து
தி.மு.க., -- எம்.எல்.ஏ., மீதான பணப்பட்டுவாடா வழக்கு ரத்து
ADDED : டிச 03, 2025 07:00 AM

சென்னை : வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக, தி.மு.க., - எம்.எல்.ஏ., முருகேசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதியில், கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில், எஸ்.முருகேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவருக்கு ஓட்டளிப்பதற்காக, கமுதி பகுதி வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்ததாகக் கூறி, பிரவீன்குமார், குமார், அரசகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 9,000 ரூபாயை, தேர்தல் பறக்கும் படை அதிகாரி பறிமுதல் செய்தார்.
இதுதொடர்பாக, முருகேசன் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், முருகேசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் கே.சரவணன், காவல் துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரும், வேட்பாளருமான முருகேசனுக்கும், கைதான மூன்று பேருக்கும், அவர்களிடம் பறிமுதல் செய்த பணத்துக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க, எவ்வித ஆதாரங்களும் இல்லை.
எனவே, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் மனுதாரருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு ரத்து செய்யப் படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

