தி.மு.க., - எம்.பி., ராசா மீது தேர்தல் கமிஷனில் புகார்
தி.மு.க., - எம்.பி., ராசா மீது தேர்தல் கமிஷனில் புகார்
ADDED : நவ 25, 2025 05:36 AM

சென்னை: 'தேர்தல் கமிஷனுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள, தி.மு.க., - எம்.பி., ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், தமிழக பா.ஜ., மாநில சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரகுரு அளித்துள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 15ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், தி.மு.க., சார்பில் பயிற்சி கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற அக்கட்சி எம்.பி., ராசா, எஸ்.ஐ.ஆர்., செயல்முறையை விமர்சித்து பேசியுள்ளார். அவரது பேச்சுகள், தேர்தல் கமிஷனுக்கு எதிராக, பொதுமக்களை துாண்டிவிடும் வகையிலும், பொது அமைதிக்கு பாதகம் செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.
இது எஸ்.ஐ.ஆர்., காலக்கட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். தேர்தல் கமிஷன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும். எனவே, தேர்தல் கமிஷனுக்கு எதிராக, அவதுாறு பரப்பிய ராசா மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பதவியை பறித்து, தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

