தி.மு.க., - எம்.எல்.ஏ., பஸ்சில் அரசு பஸ் டிக்கெட் வினியோகம்
தி.மு.க., - எம்.எல்.ஏ., பஸ்சில் அரசு பஸ் டிக்கெட் வினியோகம்
ADDED : மார் 03, 2024 05:10 AM

பெரம்பலுார் : திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி டிரான்ஸ்போர்ட் நிறுவன பஸ், பெரம்பலுார் முதல் துறையூர் வரை இயக்கப்படுகிறது.
இந்த பஸ்சில் பெரம்பலுார் மாவட்டம், நக்கசேலம் கிராமத்தை சேர்ந்த ராமர், நேற்று முன்தினம் நக்கசேலத்தில் இருந்து பெரம்பலுாருக்கு பயணித்தார். அப்போது, 17 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினார்.
டிக்கெட்டில் ஒரு பக்கத்தில் அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் என்றும், மறுபக்கத்தில் தனலட்சுமி டிரான்ஸ்போர்ட் என்றும் குறிப்பிட்டு, நாள், பயண கட்டணம், பயணம் நேரம் உள்ளிட்டவை அச்சிடப்பட்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் அருகில் இருந்த சக பயணியரிடம் கேட்டபோது, அனைவருக்கும் இதுபோன்றே டிக்கெட் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அவர், டிக்கெட்டின் இரண்டு பக்கங்களையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே, அது வேகமாக பரவி வருகிறது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் பணிமனையில் பணியாற்றும் யாரோ ஒரு கண்டக்டர் அல்லது பணியாளர் டிக்கெட் ரோலை, குறைந்த விலைக்கு விற்பனை செய்திருக்கலாம் அல்லது எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான டிரான்ஸ்போர்ட் நிறுவனம் என்பதால் அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் பணிமனைக்கு டிக்கெட் அச்சடித்த இடத்தில் நேரடியாக இவர்களே இலவசமாக வாங்கி இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

