தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன், மருமகள் ஜாமின் கேட்டு மனு
தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன், மருமகள் ஜாமின் கேட்டு மனு
ADDED : ஜன 31, 2024 01:01 AM
சென்னை:வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் மகன் மற்றும் அவரது மருமகள் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி. இவரது மகன் ஆன்டோ மதிவாணன்,35, இவரின் மனைவி மார்லினா ஆன், 32.
திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இவர்களது வீட்டில், மாதச்சம்பள அடிப்படையில் பணிபுரிந்த பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பணிப்பெண் அளித்த புகாரின்படி, திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆன்டோ மதிவாணன், அவரது மனைவி மார்லினா ஆன் ஆகியோர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும், ஜன.,25ல் தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரும் பிப்.,9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஆன்டோ மதிவாணன், மார்லினா ஆன் ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில், 'புகார்தாரரை எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை. குடும்பத்தில் ஒருவராகக் கருதி அவருக்கு தனி படுக்கை அறை ஒதுக்கி உரிய பாதுகாப்பு வழங்கினோம்.
'மேல்படிப்புக்கும் ஏற்பாடு செய்தோம். நாங்கள் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. நாங்கள் அப்பாவி. எனவே, எங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டுஉள்ளது.
இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.