UPDATED : நவ 15, 2024 11:39 PM
ADDED : நவ 15, 2024 11:35 PM

சென்னை : மாறி மாறி குற்றச்சாட்டு சொல்வதை தவிர, மக்கள் மீது அக்கறை இல்லை; நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமும் இல்லை' என, தி.மு.க., - அ.திமு.க., மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மதுரையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசினார். முதல்வரை அவதுாறு செய்யும் விதமாக பேசியதாக, ராஜு மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ராஜு மனு தாக்கல் செய்தார்.
உத்தரவு
மனு, நீதிபதி வேல்முருகன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை என்றும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., என்ற முறையில் ஜனநாயக கடமை ஆற்றியதாக ராஜு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
'முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் பேசியதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது' என, அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், செல்லுார் ராஜு பேச்சில் அவதுாறு எதுவும் இல்லை என்று கூறி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து, நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
கடந்த 2022ல் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை எடுத்துச் சென்றதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது தொடரப்பட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரி, முன்னாள் அமைச்சர் சண்முகம் தாக்கல் செய்த மனுவும், நீதிபதி வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது.
'வழக்கு தொடர்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சைதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன; 300க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது; விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால், விரைந்து விசாரணையை முடித்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சி.பி.சி.ஐ.டி.,க்கு, நீதிபதி உத்தரவிட்டார்.
சாதனைகள் இல்லை
இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையின்போது, கட்சிகளின் பெயரை குறிப்பிடாமல் தி.மு.க., - அ.தி.மு.க., அரசியலை நீதிபதி வேல்முருகன் விமர்சித்தார்.
அவர் கூறியதாவது:
இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம், இரண்டுக்கும் இல்லை. மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளன. இருப்பை தக்கவைத்துக் கொள்ள, இருவரும் மாறி மாறி குறை கூறிக் கொண்டு இருக்கின்றன.
இரு தரப்பிலும் சொல்லக் கூடிய அளவில் சாதனைகள் இல்லை. இப்படி பேசிக் கொண்டிருந்தால், அடுத்த தலைமுறை எப்படி உருப்படும்?
ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்ற போர்வையில், ஒரு கட்சி, மற்றொரு கட்சியை குற்றம் சாட்டும் நிலை தான் உள்ளது.
கல்லுாரி மாணவியரை மனசாட்சியே இல்லாமல் எரித்த கட்சியினர், தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகி, அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்ததெல்லாம் இங்கு தான் நடக்கின்றன.
இரண்டு கட்சியினருக்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லை. அவரவர் கட்சியைப் பற்றி மட்டும் தான் அக்கறை இருக்கிறது.
உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா; வேறு வழக்குகள் இல்லையா? எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதே போலீஸ் தான் பணியில் இருக்கின்றனர். தேவையின்றி, போலீசாரை குற்றஞ்சாட்ட வேண்டாம். இவ்வாறு நீதிபதி கூறினார்.