தி.மு.க.,- அ.தி.மு.க., வித்தியாசம் இதுதான்: இ.பி.எஸ்.,
தி.மு.க.,- அ.தி.மு.க., வித்தியாசம் இதுதான்: இ.பி.எஸ்.,
ADDED : நவ 24, 2024 06:09 PM

சென்னை: '' தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே பதவிக்கு வர முடியும். அ.தி.மு.க.,வை பொறுத்தவரையில் யார் விசுவாசமாக உழைக்கிறார்களோ அவர்கள் பதவிக்கு வர முடியும்,'' என அ.தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
சென்னை வானகரத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஜானகி நூற்றாண்டு விழாவில் பழனிசாமி பேசியதாவது: கட்சி துவக்கிய போது எம்.ஜி.ஆர்., சந்தித்த பிரச்னைகளை ஜெயலலிதா சந்தித்தார். தற்போதும் அதேபோன்ற பிரச்னையை சந்தித்து வருகிறோம். அ.தி.மு.க., பிரச்னையை சந்திக்கும் போது எல்லாம் வெற்றியை பெறுவது இயல்பு. கட்சியை அழிக்க நினைக்கிறவர்கள், முடக்க நினைக்கிறவர்களின் எண்ணம் ஈடேறாது.
எம்.ஜி.ஆர்., உயிருடன் இருந்தபோது 1980 களில் லோக்சபா தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. எந்த ஒரு கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றதும் கிடையாது. தோல்வி அடைந்ததும் கிடையாது. அனைத்து கட்சிகளும் வெற்றியையும், தோல்வியையும் மாறி மாறி சந்திக்கின்றன. அ.தி.மு.க., தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்கின்றனர்.
தி.மு.க.,10 ஆண்டுகாலம் தொடர் தோல்விகளை சந்திக்கவில்லையா? அப்படி தொடர் தோல்விகளை சந்தித்த கட்சி ஆட்சிக்கு வரவில்லையா? அக்கட்சி 1991 ல் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. 1996 ல் ஆட்சியை பிடிக்கவில்லையா? காலம் மற்றும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்சி மாற்றம் ஏற்படுவது இயல்பு. அ.தி.மு.க., வை பொறுத்தவரை வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்டது.
அ.தி.மு.க., தொண்டர்கள் போன்று வேறு எந்த கட்சியிலும் கிடையாது. அ.தி.மு.க., என்பது குடும்பம். குடும்ப கட்சி. தி.மு.க.,வும் குடும்ப கட்சி.அது கருணாநிதியின் குடும்ப கட்சி. அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே அக்கட்சியின் தலைவராக முடியும். ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். அ.தி.மு.க., பொறுத்தவரையில் யார் விசுவாசமாக இருக்கிறார்களோ, உழைக்கிறார்களா அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஆக வர முடியும். அதுபோல் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் மற்றும் முதல்வர் கூட ஆக முடியும். அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் உள்ள வேறுபாடு இதுதான். அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சியை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தமிழகத்தை அதிக ஆண்டு ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.க., மட்டுமே. 31 ஆண்டுகாலம் நல்லாட்சி செய்த கட்சி அ.தி.மு.க.,
நாம் கோவிலாக நினைக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து சேதப்படுத்திய காட்சியையும் நாம் பார்த்தோம். ஆண்டவன் பார்த்துக்கொள்வான். இன்னும் 15 மாதங்களில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலிதா விட்டுச் சென்ற பணிகளை தொடர நமக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அது தொடர வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.