அமெரிக்காவின் வரி விதிப்பை கண்டித்து திருப்பூரில் தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் வரி விதிப்பை கண்டித்து திருப்பூரில் தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 02, 2025 09:44 PM

திருப்பூர்; இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால், திருப்பூர் தொழிற்துறை பாதிக்கப்படுகிறது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூரில், தி.மு.க., கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நீலகிரி எம்.பி., ராஜா தலைமை வகித்து பேசுகையில், ''இந்தியா மீது அமெரிக்க வரி விதிப்பு என்பது இப்போது மட்டும் வரவில்லை. மன்மோகன்சிங் ஆட்சியின் போதும் வரி விதிக்கப்பட்டது. அவர் அதனை தைரியமாக வேறு வகையில் கையாண்டார். அதேபோல் ஒரு புதிய வழிமுற கையாள வேண்டும்,'' என்றார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசுகையில், ''துணி, நுால் வர்த்தகம் மீதான வரியினங்கள் குறைக்க வேண்டும். ஜவுளி தொழிற் துறையின் தற்போதைய நெருக்கடி நிலையைக் கருதி, வட்டியில்லாத கடன், வரி குறைப்பு, ஏற்றுமதிக்கான கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்,'' என்றார்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, சர்வதேச கொள்கை ஆகியன தான் இது போன்ற நிலைக்கு காரணம். இதனை மோடி உணர வேண்டும். அமெரிக்காவின் அதிகார போக்குக்கு அடி பணியக் கூடாது,'' என்றார்.
திருப்பூர் எம்.பி., சுப்பராயன் பேசுகையில், ''ஏற்கனவே உள்ள 16 சதவீத வரியுடன் மேலும், 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் நம் நாட்டின் ஏற்றுமதி தொழில்கள் நலிவடைந்து மூடப்படும் அபாயம் உருவாகி, தொழிலாளர் வேலை இழப்பும் ஏற்படும். இதன் விளைவாக வேறு நாடுகள் நம் நாட்டின் ஆர்டர்களை பெற்று விடும்,'' என்றார்.முன்னதாக, எம்.எல்.ஏ., செல்வராஜ் வரவேற்றார். கொங்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார். தி.மு.க., கூட்டணி சார்பில், தங்கபாலு (காங்.) வெங்கடேசன் (மா.கம்யூ.), ஈஸ்வரன் (கொ.ம.தே.க.), ஜவாஹிருல்லா (ம.ம.க.) தமிமுன் அன்சாரி (ம.ஜ.க.), அதியமான் (ஆதி தமிழர் பேரவை) ஆகியோர் அமெரிக்காவின் அபரிதமான வரிவிதிப்பை சரியான முறையில் மத்திய அரசு போர்கால அடிப்படையில் கையாள வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.