200 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி டெபாசிட் இழக்கும் : அண்ணாமலை கணிப்பு
200 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி டெபாசிட் இழக்கும் : அண்ணாமலை கணிப்பு
UPDATED : டிச 21, 2024 10:55 PM
ADDED : டிச 21, 2024 05:05 PM

கோவை: '' வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அழுத்தமா
கோவையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: ஜாபர் சாதிக் வழக்கில் இருந்து விலகுவதாக மூத்த நீதிபதி கூறியுள்ளார். அவருக்கு வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதா?ஆளுங்கட்சியினர் தொடர்புடைய நபர் என்பதால், அதற்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
யார் கருத்து
சபாநாயகர் கண்ணாடியை பார்க்க வேண்டும். தி.மு.க., தொண்டரை விட அக்கட்சிக்கு அதிகம் வேலை பார்ப்பது அவர் தான். சபாநாயகர் நடுநிலையாக இருக்க வேண்டும். இருக்கிறாரா என்ற கேள்வியை வைக்கிறேன். சட்டசபையில் ஆட்சியின் பாதி விஷயத்தை அவர் தான் பேசுகிறார். சட்டசபையை தி.மு.க., சார்பில் நடத்திக் கொண்டு செல்வதே அப்பாவு தான். கவர்னர் குறித்து பேச அவருக்கு உரிமை இல்லை என பார்க்கிறேன். சபாநாயகரின் கருத்து, தி.மு.க., உறுப்பினரின் கருத்தா?, அப்பாவுவின் கருத்தா?
அமைச்சரின் அரசியல்
ஆறு பல்கலைகளில் துணைவேந்தர் இல்லை. இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உயர்கல்வி யுஜிசி கீழ் உள்ளது. 100 சதவீதம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் இல்லை. அப்படி இருக்கும்போது தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க யார் அதிகாரம் கொடுத்தார்கள். இதைப்பற்றி முதல்வர் அமைச்சர், திருமாவளவன் பேசாமல், குட்டையை குழப்பத்தான் செய்கின்றனர்.
ஆட்சியாளர்கள் அரசியல் செய்வதால், கவர்னர் கருத்து சொல்கிறார். நீங்கள் அரசியல் செய்யவில்லை என்றால், கவர்னர் ஏன் தலையிட போகிறார். துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் ரவி வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளார். துணைவேந்தர் தேர்வில் முறைகேடு என்று யாரும் சொல்லவில்லை. அமைச்சர் தான் அரசியல் செய்கிறார். அரசியல் செய்யும் அமைச்சரை கவர்னர் சரியான திசையில் கொண்டு செல்கிறார்.
கவுரவம்
திருமாவளவன் மனசாட்சிப்படி பதில் சொல்ல வேண்டும். முன்பு, அவர் தான் காங்கிரஸ், தி.மு.க.,வை எதிர்த்து போராட்டம் நடத்தினார். காங்கிரஸ் , தி.மு.க.,வை விடவா சமூக நீதியில் பா.ஜ., பின்னால் உள்ளது அரசியலுக்காக திருமாவளவன் விமர்சனம் செய்கிறார். அரசியலில் திமு.க., உடன் இருக்க வேண்டும். அக்கட்சி சொல்வதை கேட்க வேண்டும். கிளிபோல் பேச வேண்டும் என்ற அவருக்கு ஏற்பட்டுள்ள நிலை கண்டு கவலைப்படுகிறேன்.
தேச விரோதம்
பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம். ஜாதி இல்லை. ஒரு பயங்கரவாதியை கொண்டாடுவதை தவறு சொல்கிறோம். இஸ்லாமை தவறு எனசொல்லவில்லை. பயங்கரவாதியை தவறு என்கிறோம். திமுக.,விற்கு எதிராக போராடினால் அனுமதி இல்லை. கூட்டம் சேர்வதற்கு அனுமதி இல்லை. ஆனால், பயங்கரவாதி என்று சொல்லி புதைக்கப்படுகிறார்கள், விதைக்கப்படுகிறார்கள் என சொல்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அது பிரிவினைவாதம் இல்லையா? தியாகி என சொல்கின்றனர். அது தேத பிரிவினைவாதம் இல்லையா? அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்( என்எஸ்ஏ) இல்லையா? பத்திரிகையாளர் யாராவது கருத்துசொன்னால்,அவருக்கு எதிராக இச்சட்டத்தை போடுகின்றனர். திமுக.,வை எதிர்த்து சொன்னால், கஞ்சா வழக்கு போட்டு தேனி அழைத்து செல்கின்றனர்.
துவக்கம்
முதல்வர் பதவியில் இருந்து ஸ்டாலினை அகற்றுவதற்கான பணிகளை மக்கள் துவக்கி விட்டனர். எதை கொண்டு வந்தாலும் தமிழகத்திற்கு எதிராக கொண்டு வருவதாக கூறுகின்றனர்.எதை செய்தாலும் நேர்மையாக செய்து கொண்டு உள்ளோம். அதனை முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும். 200 தொகுதிகளில் திமு.க., கூட்டணி டெபாசிட் இழக்கும். டெபாசிட் இழப்பவர்கள் தான் 200 தொாகுதிகளில் வெற்றி எனச் சொல்வார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

