தி.மு.க., போராட்டத்திற்கு அனுமதி; எதிர்த்து பா.ம.க., வழக்கு
தி.மு.க., போராட்டத்திற்கு அனுமதி; எதிர்த்து பா.ம.க., வழக்கு
ADDED : ஜன 08, 2025 06:11 AM
சென்னை ; கவர்னருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் நடத்தும் போராட்டத்துக்கு அனுமதியளித்து விதிமீறலில் ஈடுபட்ட, மாநகர போலீஸ் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பா.ம.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பா.ம.க., கொள்கை பரப்பு செயலர் பி.கே.சேகர் தாக்கல் செய்த மனு:
அண்ணா பல்கலை மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து, ஜனவரி, 2ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பா.ம.க., சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
அனுமதி கோரி, சென்னை போலீஸ் கமிஷனரிடம், டிசம்பர், 30ல் விண்ணப்பிக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பம் செய்ய வேண்டும் எனக்கூறி, அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு முதல் சட்டசபை கூட்டத்தொடர், டிச., 6ல் துவங்கியது. அதில், கவர்னர் உரையாற்றாமல் புறக்கணித்து வெளியேறினார். கவர்னரின் செயலுக்கு எதிராக, எந்த கட்டுப்பாடும் இல்லாமலும், விண்ணப்பம் பெறாமலும், ஆளுங்கட்சியினரின் போராட்டத்துக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் அனுமதி வழங்கியுள்ளார்.
போராட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற, சென்னை நகர போலீஸ் சட்ட விதியை மீறி செயல்பட்ட காவல் கமிஷனர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.