'கபட நாடகம் ஆடுவதில் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் தி.மு.க.,வினர்'
'கபட நாடகம் ஆடுவதில் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் தி.மு.க.,வினர்'
ADDED : நவ 13, 2024 06:25 AM

சென்னை : 'தி.மு.க.,வினர் கபட நாடகம் ஆடுவதில், பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் அவதியுறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் கோரிக்கைகள், தி.மு.க., அரசால் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
சுட்ட உண்மைகள்
'எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் தான் அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வரும் என்றால், 2026 சட்டசபை தேர்தலில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்க, நாங்கள் தயார்' என, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கும் அளவுக்கு ஏமாற்று நடந்துள்ளது.
அவர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் உணர்வுகள்தான் வெளிப்பட்டுள்ளன என, திருச்சியில் நிருபர்களிடம் தெரிவித்தேன்.
என் கருத்தில் உள்ள உண்மைகள் சுட்டதால், முதல்வர் தரப்பில் இருந்து ஏழு பக்க மொட்டைக் காகித அறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது.
கபட நாடகம் ஆடுவதில் பிஎச்.டி., பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், நான் கபட நாடகம் ஆடுவதாக ஓலமிடுகின்றனர்.
எந்த சூழ்நிலையிலும் நாடகமோ, கபட நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இல்லை.
அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முடிந்தது.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் அந்தளவுக்கு ஜனநாயகம் தழைத்தோங்கியது.
ஆனால், தி.மு.க., ஆட்சியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்த முற்பட்டால், போலீஸ் துறையை ஏவி கைது செய்து, அவர்களது குரல்வளையை தி.மு.க., அரசு நெரிக்கிறது.
பதிலடி தருவர்
பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசை போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏற்று, தங்களின் செயல்பாடுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து, ஆட்சிக்கு வந்த திமு.க.,விடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
இனியும் இதய சுத்தியோடு செயல்படும் எங்கள் மீது, உண்மை நிலைகளை உணராமல், தி.மு.க., பாய்ந்து பிராண்டினால், மக்கள் தக்க பதிலடி தருவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.