மாதம் ரூ.16 லட்சம் மாமூல் வசூலிக்கும் தி.மு.க., புள்ளி!
மாதம் ரூ.16 லட்சம் மாமூல் வசூலிக்கும் தி.மு.க., புள்ளி!
UPDATED : ஜன 07, 2024 06:52 AM
ADDED : ஜன 07, 2024 06:51 AM

''மறைந்த அரசியல் கட்சி தலைவரின் வாரிசுக்கு, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பதவி வழங்கக் கூடாதுன்னு, கவர்னருக்கு புகார் அனுப்பி வச்சிருக்காளாம் ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியுடன் வந்தமர்ந்தார் குப்பண்ணா.
''விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, மறைந்த முன்னாள் தலைவரின் வாரிசு ஒருத்தர், சென்னை பல்கலை., பதிவாளரா வேலை பார்த்து, 'ரிட்டையர்' ஆகிட்டார்... அவர், 'ரிட்டையர்' ஆகறச்சே, நிர்வாக ரீதியா சில பிரச்னைகளில் மாட்டினுட்டார்...
![]() |
''இப்ப, சென்னையில தனியார் கல்லுாரியில் வேலை பார்த்துண்டு இருக்கற அவர், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக தீவிரமா முயற்சி செஞ்சுண்டு இருக்கார் ஓய்...
''சமீபத்துல, மதுரை மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, உத்தப்பநாயக்கனுாரில் வசிக்கிற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை தாக்கி, மரங்களை வெட்டி வீசியதா இவர் மேல புகார் வந்துடுத்து... போலீஸ்ல வழக்கும் பதிவு செஞ்சுட்டா ஓய்...
''இதனால, 'இப்படிப்பட்ட வாரிசுக்கு எப்படி டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பதவி கொடுப்பேள்'னு கேட்டு, தலைமை ஆசிரியை தரப்புல இருந்து, கவர்னருக்கே நேரடியா புகார் அனுப்பி வச்சுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கட்சிக்காரங்க செய்த வேலையை பார்த்து அமைச்சர், 'டென்ஷன்' ஆகிட்டாரு வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''அப்படி என்ன ஓய் செஞ்சுட்டா...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில, சமீபத்துல அரசு விழா நடந்துச்சு... மாணவியருக்கு இலவச சைக்கிள்
வழங்க, மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போயிருந்தாரு வே...
''அப்ப, பள்ளி வளாகத்தில் தி.மு.க.,வின் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப்படத்தை அலங்கரிச்சு தி.மு.க.,வினர் வச்சிருந்தாவ...
''இதை பார்த்து, 'டென்ஷன்' ஆன அமைச்சர், 'பொது இடத்தில் இதுபோல கட்சி நிகழ்ச்சிகளை நடத்தலாமா'ன்னு நிர்வாகிகளுக்கு செமத்தியா டோஸ் விட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''முதல்வர், அவர் மகன் பெயரை சொல்லி வசூல் வேட்டை நடக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கோவை மாவட்ட டாஸ்மாக் கடைகளின் மாத விற்பனையில், 10 சதவீதம் ஆளுங்கட்சிக்கு மாமூலா வழங்கப்பட்டு வருதுங்க... இதை தவிர சிலர், தி.மு.க., இளைஞரணி மாநாடு நிதின்னு தனியா வசூல் வேட்டை நடத்திட்டு இருக்காங்க...
''பொள்ளாச்சி நகர தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நிர்வாகி, 'டாஸ்மாக் கடை மற்றும் மதுபான கூடங்களில் இருந்து, மாசம் சொளையா, ௧ லட்சம் ரூபாய் கட்டாய மாமூல் வசூலிச்சுட்டு இருக்காருங்க... 'கப்பம் கட்டலைன்னா, கடை நடத்த முடியாது'ன்னு பகிரங்கமாவே மிரட்டுறாருங்க...
''நகராட்சி வணிக வளாகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையுடன் கூடிய மதுபான கூடத்தை நடத்துறவங்க, மாமூல் தராம முரண்டு பிடிச்சாங்க... அந்த பாருக்கு, நகராட்சி அதிகாரிகள், 'நோட்டீஸ்' கொடுத்துட்டாங்க...
''இதை பார்த்து மிரண்டு போன மற்ற பார் உரிமையாளர்கள், ஆளுங்கட்சி பிரமுகருக்கு அடங்கி போயிட்டாங்க... இதனால, இவருக்கு மாசம், 16 லட்சம் ரூபாய் மாமூல் கொட்டுது... ரெண்டு தனியார் பார்ல, தி.மு.க., பிரமுகர் மறைமுக, 'பார்ட்னரும்' ஆகிட்டாருங்க...
''அதுவும் இல்லாம, 'வசூல் பணம் முழுதையும், ஆளுங்கட்சி மேலிடத்துக்கு தான் கொடுக்குறேன்'னு சொல்லி, கட்சியினருக்கும் பங்கு தராம பதுக்கிட்டாருங்க...
''இதனால குழம்பிப் போன ஆளுங்கட்சி நிர்வாகிகள், இந்த விவகாரத்தை கட்சி தலைமை வரை கொண்டு போயிருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி. அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.