ADDED : ஜன 31, 2024 12:25 AM

'ரிட்டையர் ஆன பிறகும் அதிகாரியின் ஆதிக்கம் குறையலையாம் பா...'' என்ற அன்வர்பாய், இஞ்சி டீயுடன் வந்தமர்ந்தார்.
''என்ன விவகாரமுங்க...'' எனக்கேட்டார் அந்தோணிசாமி.
''பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் யூனியன் டெபுடி பி.டி.ஓ.,வா வேலை பார்த்த அதிகாரி, போன வருஷம் அக்டோபர் மாசம் ரிட்டையர் ஆனாரு பா...
''ஆனாலும், யூனியன் சேர்மனின் பர்சனல் பி.ஏ.,வா இப்பவும் இருக்குறாரு... அவர் வேலை பார்த்த இடத்துக்கு, தன் சொல் பேச்சு கேட்கும், 'டம்மி பீஸ்' ஒருத்தரை அவரே கொண்டு வந்துட்டாரு...
''மாஜி அதிகாரியின் கவனத்துக்கு போகாம, புது அதிகாரி எதையுமே செய்யுறதில்ல... 'டெண்டர்' பணி ஒதுக்கீடு எல்லாத்துலயும் மாஜி அதிகாரி சொல்றது தான் இப்பவும் இறுதி முடிவா இருக்குது பா...
''தி.மு.க., கட்சிக் கொடி போட்ட கார், சின்னம் பொறிச்ச பெரிய, 'சைஸ்' மோதிரத்தை போட்டுக்கிட்டு, ரிட்டையர் ஆன அதிகாரி ஆலத்துார் யூனியன் ஆபீசையே ஆட்டிப்படைக்குறாரு பா...'' என்ற அன்வர்பாய்,
''என்ன ராஜேந்திரன் சார், மாணிக்கம் உங்களை தேடி வந்தாரே பார்த்தீங்களா...'' என்றபடியே நண்பருக்கும் பெஞ்சில் இடமளித்தார்.
''தேர்தல் தலைமை ஆபீசுக்கு சத்தமில்லாம கணபதி ஹோமத்தை போட்டுட்டா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த கட்சியிலங்க...'' எனக்கேட்டார் அந்தோணிசாமி.
''சென்னை அமைந்த கரையில இருக்கற அய்யாவு மஹாலை, தேர்தல் தலைமையகமா தமிழக பா.ஜ., செலக்ட் செஞ்சிருக்கு... தேர்தல் முடியற வரைக்கும் அந்த மஹாலைமொத்தமா வாடகைக்கு பிடிச்சிட்டா ஓய்...
''இந்த இடத்தை தான், 'வார் ரூம்' போல பயன்படுத்தி, லோக்சபா தேர்தல் பணிகளை செய்யப்போறா... இந்த புது ஆபீசுக்கு சமீபத்துல சத்தமில்லாம கணபதி ஹோமத்தையும் போட்டுட்டா...
''இந்த ஹோமத்துல தமிழக பா.ஜ., துணை தலைவர் சக்கரவர்த்தி, மாநில செயலர் சுமதி வெங்கடேசன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் தனசேகர்னு ஒருசிலர் மட்டும் கலந்துண்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''திருநெல்வேலி லோக்சபா தொகுதியை பிடிக்கறதுல தி.மு.க.,வில் பலத்த போட்டி உருவாகிட்டு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட ஆறு சட்டசபை தொகுதிகள் சேர்ந்தது தாம்வே திருநெல்வேலி லோக்சபா தொகுதி...
''இங்கன, ஹிந்து, கிறிஸ்துவர்கள், நாடார், முக்குலத்தோர். பிள்ளைமார், பட்டியலினத்தவர்கள், முஸ்லிம்னு எல்லா ஜாதி - மத ஆளுகளும் கலந்து வாழுதாவ...
''அதனால, எல்லா ஜாதி - மத மக்களுடனும் ஒண்ணுமன்னா சேர்ந்து ஒத்துமையா இருக்குற வேட்பாளரை தான் வழக்கமா நிறுத்துவாக...
''இந்த முறை இந்த தொகுதியில போட்டியிட தி.மு.க.,வில் போட்டி வலுத்துட்டு... 'தற்போதையை சிட்டிங் எம்.பி., ஞானதிரவியம், கிரகாம்பெல், அஜய் பாண்டியன், சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ்'னு பல பேரு பந்தயத்துல நிக்காவ...
''தலைமை மனசுல என்ன நினைக்கோ... பொறுத்திருந்து பார்ப்போம் வே...'' என்றபடியேஅண்ணாச்சி எழ, மற்றவர்களும் புறப்பட்டனர்.