கடையை துவம்சம் செய்த மதுரை தி.மு.க., கவுன்சிலர்கள்!
கடையை துவம்சம் செய்த மதுரை தி.மு.க., கவுன்சிலர்கள்!
ADDED : நவ 12, 2024 10:07 AM

திருமங்கலம்: மதுரை அருகே திருமங்கலத்தில் கொடுக்கல் வாங்கல் தகராறில், நகராட்சி கடை வாடகை கேட்டு பலகார கடையை தி.மு.க., கவுன்சிலர்கள் துவம்சம் செய்தனர்.
திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் நகராட்சி கடையை நடத்தி வருபவர் அம்மாவாசி. இக்கடையை ஆறுமுகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் சாத்தங்குடி பாண்டியிடம், அம்மாவாசி ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் பணம் கொடுத்தவருக்கு ஆதரவாக திருமங்கலம் நகராட்சி 1வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் காசிப்பாண்டி, 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் 'பெல்ட்' முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நவ. 6ல் கடைக்கு சென்றுள்ளனர். அம்மாவாசி குறித்து கேட்டபோது கடையை தான் நடத்துவதாக ஆறுமுகம் கூறியுள்ளார். அவரிடம் கடை வாடகையை தங்களிடம் செலுத்துமாறு கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு பலகார கடை தட்டுகளை கவுன்சிலர் காசிப்பாண்டி துாக்கி வீசி சூறையாடினார். அதை கவுன்சிலர் முருகன் உள்ளிட்டோர் தடுக்க முயன்றனர். இதையடுத்து இரு தரப்பினரும் திருமங்கலம் நகர் போலீஸ் புகார் அளிக்க சென்றனர். பின்னர் சமரசம் ஆயினர்.

