திருநெல்வேலி மாநகர மேயரை காக்க தி.மு.க. நடத்திய ' கூவத்துார் பார்முலா! '
திருநெல்வேலி மாநகர மேயரை காக்க தி.மு.க. நடத்திய ' கூவத்துார் பார்முலா! '
ADDED : ஜன 12, 2024 11:29 PM

திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க. மேயர் சரவணன் மீது நேற்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பில் தி.மு.க. - அ.தி.மு.க. உட்பட கவுன்சிலர்கள் யாரும் வராததால் தோல்வியடைந்தது.
இதன் பின்னணியில் நடந்தது குறித்து, திருநெல்வேலி தி.மு.க. கவுன்சிலர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:
திருநெல்வேலி மாநகராட்சியில், மொத்தம் 55 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 45 பேர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் அ.தி.மு.க. மீதமுள்ளவர்கள் தி.மு.க. கூட்டணி மற்றும் ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்கள். தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன் மாநகராட்சி மேயராக உள்ளார்.
கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மேயர் மீது கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், தி.மு.க. கவுன்சிலர்கள் 38 பேர், மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
சொந்தக்கட்சி மேயருக்கு எதிராக தி.மு.க. கவுன்சிலர்களே போர்க்கொடி துாக்கியது, கட்சி தலைமைக்கு தலைவலி யை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை கையாளும்படி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டது. அவரது தலையீட்டின் படி, தி.மு.க. கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தப்பட்டது.
மேயருக்கு எதிரான புகாரை கட்சி ரீதியாக பின்னர் விசாரிப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் மட்டும் சமாதானம் அடைந்தனர்.
கோபம் தணியாத கவுன்சிலர்களை அருப்புக்கோட்டை அருகே உள்ள ஹோட்டல் மற்றும் பங்களா வீட்டில் தங்கவைத்து, அவர்களை குளிர்விக்க தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்தது. அத்திட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்ததால் எல்லாரும், நேற்று முன்தினம் மாலையே சொகுசு ஹோட்டல், பங்களாவில் தங்க வைக்கப்பட்டனர். ஆளுங்கட்சி சாராத மற்ற கவுன்சிலர்கள் சிலரும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைத்தனர்.
இந்நிலையில், மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, மாநகராட்சி கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்த மாநகராட்சி கமிஷனர் ஞானதேவ் ராவ் நடவடிக்கை எடுத்திருந்தார்.
திட்டமிட்டபடி நேற்று காலை 11:00 மணிக்கு ஓட்டெடுப்பு நடத்த கமிஷனர் மாமன்ற அலுவலகத்திற்கு வந்தார்.
ஆனால் 11.30 வரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஒரு கவுன்சிலர் கூட கூட்டத்திற்கு வரவில்லை. இதனால், மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்படுவதாக கமிஷனர் அறிவித்தார்.
மேலும், ஓர் ஆண்டுக்கு மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது என்றும் கூறினார். தி.மு.க. நெல்லை மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் அலுவலகத்தில் காத்திருந்த மேயர் சரவணன், 12:00 மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின், அ.தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட 'கூவத்தூர் பார்முலா'வை, நெல்லை மேயர் பதவியை காப்பாற்ற தி.மு.க., தலைமை தற்போது கையில் எடுத்து, அதில் வெற்றியும் கண்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -