ADDED : நவ 04, 2025 04:57 AM

புதுக்கோட்டை,: ''எஸ்.ஐ.ஆர்., வேண்டாம் என்று கூறவில்லை. அவசரப்பட்டு செய்ய வேண்டாம் என்று தான் கூறுகிறோம்,'' என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், அவர் அளித்த பேட்டி:
வாக்காளர் பட்டியலில், எந்த போலி வாக்காளர்களையும் சேர்க்க வேண்டிய அவசியம் தி.மு.க.,விற்கு இல்லை. உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு விடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாக தான் இதை கூறுகிறோம்.
நாங்கள் எஸ்.ஐ.ஆர்., தேவையில்லை என்று கூறவில்லை. அவசரப்பட்டு எஸ்.ஐ.ஆர்., எடுக்கக் கூடாது; தேர்தல் முடிந்த பிறகு நிதானமாக யாருடைய ஓட்டும் விடுபடாமல் எடுக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம்.
பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் கொடுத்த பின் பூர்த்தி செய்து, அதை மீண்டும் அவர்கள் வழங்காவிட்டால் அவர்களுடைய வாக்காளர் உரிமையை எஸ்.ஐ.ஆர்., பறித்து விடும். தி.மு.க., மீது எத்தனை குற்றச்சாட்டுகளை யார் வைத்தாலும் மக்கள் எங்களுக்கு தான் ஓட்டளிப்பர்.
அ.தி.மு.க., வில் பழனிசாமி மகனின் தலையீடு அதிகமாக உள்ளதால், அ.தி.மு.க.,வும் குடும்ப அரசியலுக்கு மாறி விட்டது என்று செங்கோட்டையன் கூறி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேட்டபோது, “நீங்களே தமிழகம் முழுதும் சுற்றி பார்க்கலாம். அந்த செலவுகளை, அ.தி.மு.க., ஏற்கும்,” என்றார். இதனால், செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, சுதாரித்துக் கொண்ட அமைச்சர் ரகுபதி, 'மாவட்ட தி.மு.க.,' என திருத்தி கூறினார்.

