நீதித்துறையை இழிவுபடுத்தும் தி.மு.க.,: ஹிந்து முன்னணி கண்டனம்
நீதித்துறையை இழிவுபடுத்தும் தி.மு.க.,: ஹிந்து முன்னணி கண்டனம்
UPDATED : டிச 11, 2025 06:31 AM
ADDED : டிச 11, 2025 03:46 AM

'நீதிபதி மீதான குற்றச்சாட்டு, ஒரு தீர்ப்புக்காக லோக்சபாவில் கொண்டு வருவது, நீதித்துறையை இழிவுபடுத்துவது போன்றது' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் வழக்கில் தீர்ப்பு கூறிய காரணத்துக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது, தி.மு.க., - காங்., கட்சி எம்.பி.,க்கள் லோக்சபாவில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். நீதிபதி மீது வீண் பழி சுமத்தி பதவி விலக வைக்க சதி செய்கிறது. இந்த, இரு கட்சிகளும் ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இதன் வாயிலாக, பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. இத்தகைய நிலைப்பாடு இந்திய இறையாண்மைக்கு எதிரானது.
நீதிபதி மீதான குற்றச்சாட்டு, ஒரு தீர்ப்புக்காக லோக்சபாவில் கொண்டு வருவது, இதுவே முதல்முறை. இது நீதித்துறை மீதான தாக்குதல் மட்டுமல்ல, நீதிபதிகளை மிரட்டும் போக்கு என்பதையும் சுட்டி காட்ட விரும்புகிறோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பல தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தவில்லை. இத்தகைய போக்கு கவலைக்குரியது.
தீர்ப்பின் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் போது, அந்த தீர்ப்பை அளித்த நீதிபதியை விமர்சனம் செய்ய அனுமதிக்கக் கூடாது. இது நீதித்துறையை மிரட்டி பணிய வைக்கும் சதியாகும். நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை, அனைத்து எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

