ADDED : நவ 01, 2025 05:05 AM
சென்னை: மத்திய இணை அமைச்சர் முருகன் அறிக்கை:
தமிழகத்தில், வேலை தேடி வரும், பீஹாரை சேர்ந்த கடின உழைப்பாளிகளை, தி.மு.க.,வினர் அவமதிப்பதையும், வன்மத்துடன் தகாத வார்த்தைகளால், அவதுாறு பரப்புவதையும், பிரதமர் மோடி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உண்மை வெளிப்பட்டு விட்டதே என்ற ஆத்திரத்தில், முதல்வர் ஸ்டாலின், தமிழர்களுக்கு எதிராக, பா.ஜ., பேசுவதாக சரடு விடுகிறார்.
தி.மு.க.,வை பார்த்து, பா.ஜ., கேள்வி எழுப்பினால், அது எப்படி தமிழர்களுக்கு எதிரானதாகும். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரை, மலையாளி என்று கேலி பேசியது யார்; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, பெண் என்றும் பாராமல், நா கூசும் அளவிற்கு ஜாதி பெயரை பயன்படுத்தி அவமானப்படுத்தி பிரசாரம் செய்தது யார்?
மலையாளம், கன்னடம், ஹிந்தி என, மொழியை வைத்து மக்களை பிரித்து, தமிழகத்தில் நஞ்சு ஊட்டிக் கொண்டிருப்பது தி.மு.க.,வினர் தானே. ஹிந்தி படித்தால் பானி பூரிதான் விற்க முடியும் என்று பேசியது யார்; தி.மு.க., மேடைகளில், அக்கட்சி நிர்வாகிகள் பீஹார் மக்களை ஏளனமாக பேசுவதை கேட்டு, புளகாங்கிதம் அடைந்து வருவது முதல்வர் தானே.
பீஹார் உட்பட வட மாநில மக்கள் மீது வன்மத்தை கக்கி, தாக்குதலுக்கு துாண்டி மகிழ்ச்சி கொள்ளும், வக்கிர மனம் கொண்டவர்கள் தி.மு.க.,வினர் தானே.
பீஹார் மக்கள் மீது வன்மத்தை கக்கும் தி.மு.க.,வினரை, காங்கிரஸ் ஒரு முறையாவது கண்டித்தது உண்டா. தி.மு.க., - காங்கிரஸ் ஆகிய, இரு கட்சிகளுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும், பீஹார் மட்டுமின்றி, தமிழக மக்களும் தகுந்த பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

