திமுக தேர்தல் அறிக்கை தான், 'ஹீரோ'; மகளிரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திமுக தேர்தல் அறிக்கை தான், 'ஹீரோ'; மகளிரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : டிச 30, 2025 07:18 AM

திருப்பூர்: ''விமன் பவரில்' (பெண் சக்தி) தி.மு.க. மீண்டும் 'பவரு'க்கு வரப்போகிறது. தேர்தல் வந்து விட்டால், தி.மு.க. தேர்தல் அறிக்கை தான், ஹீரோ '' என, பல்லடத்தில் நேற்று நடந்த தி.மு.க. மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு, 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் காரணம்பேட்டையில் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், கூட்ட மைதானத்திற்குள் நுழைந்தார். துணை பொது செயலரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை வகித்தார். துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வரவேற்று பேசுகையில்,''2026 சட்டசபை தேர்தலுக்கு இந்த மேற்கு மண்டல மாநாடு அடித்தளமாக அமைய வேண்டும். மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க கூடிய வகையில், 100 சதவீதம் வெற்றியை கொடுக்க வேண்டும்,'' என்றார்.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கூடியிருக்கும் பெண்கள் கூட்டத்தை பார்க்கும் போது 'பவர்புல்' ஆக இருக்கிறது. 'விமன் பவரில்' (பெண் சக்தி) தி.மு.க. மீண்டும் 'பவரு'க்கு வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. தேர்தல் வந்து விட்டால், தி.மு.க. தேர்தல் அறிக்கை தான், 'ஹீரோ'. அந்த 'ஹீரோ'வை தயாரிக்கும் பொறுப்பை, கனிமொழி ஏற்றிருக்கிறார். கடந்த எம்.பி., தேர்தலில், அவர் தலைமையேற்று தயாரித்த தேர்தல் அறிக்கை முழுமையான வெற்றியை தேடித்தந்தது. வரும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற இருக்கிறோம்.
'ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட் கோமா'
பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மசோதா நிறைவேற்றிய மத்திய அரசு அதை அமல்படுத்தாமல், பெயரளவில் வைத்துள்ளது; அது எப்போது அமலுக்கு வரும் என, சொல்ல முடியாது. 'ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் கோமா' என்ற நிலை தான் இது. பெண்களுக்கு பாராளுமன்றத்தில் அதிகாரம் கிடைப்பதை பா.ஜ. விரும்பவில்லை.
தமிழகத்தில், 1.39 கோடி பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது; பஸ்களில் விடியல் பயண திட்டத்தின் கீழ், இதுவரை, 900 கோடி பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டுள்ளனர்.கல்வியை மட்டும் தான் யாராலும் திருட முடியாது என்பதற்காக தான், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க, கல்லுாரி பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தினோம். தமிழகத்தில் ஸ்டார்ட் அப் மூலம், 13 விழுக்காடு பெண்கள் தொழில் முனைவோராக மாறி, பொருளாதாரத்துக்கு பங்களிக்கின்றனர்.
கமலாலய அறிக்கை; அ.தி.மு.க. லெட்டர் பேடு
தமிழகத்தில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், 88 விழுக்காடு பெண்கள் பயனடைந்தனர்; ஆனால், அந்த திட்டத்தை பா.ஜ., அரசு இழுத்து மூடிவிட்டது. திட்டத்தில், 40 நாட்கள் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கான நிதி சுமையையும் மாநில அரசின் மீது சுமத்தி, பல்வேறு நி பந்தனைகளை விதித்துள் ளது. இதற்கு, அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி முட்டுக் கொடுத்து வருகிறார்.
கமலாலயத்தில் தயாராகும் அறிக்கையை, அ.தி.மு.க. லெட்டர் பேடில் வெளியிட்டு வருகிறார்.அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று, 'திராவிட மாடல், 2.0' திட்டத்தில் பெண்களுக்கான திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த உள்ளோம். எனவே, பெண்களுக்காக தி.மு.க. அரசு செய்யும் சாதனைகளை வீடு, வீடாக கொண்டு சென்று சேர்க்கும் பணியை பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
மாநில பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் நேரு, முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி, எம்.பி. - ராஜா, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

