ADDED : மார் 01, 2024 07:11 AM

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்துார் ஒன்றியம், வண்டலுாரைச் சேர்ந்தவர் ஆராவமுதன், 52; வண்டலுார் ஊராட்சி முன்னாள் தலைவர். காட்டாங்குளத்துார் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலராகவும், காட்டாங்குளத்துார் ஒன்றியக்குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, அப்பகுதியில் விளம்பர பேனர் வைக்க ஏற்பாடு செய்திருந்தார். அதை பார்க்க, நேற்று இரவு 8:15 மணிக்கு, வண்டலுார் மேம்பாலம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அப்போது, மேம்பாலம் அருகில் காரை வழிமறித்த மர்ம நபர்கள், அவர் மீது வெடிகுண்டு வீசினர். தப்பியோட முயன்ற அவரை, கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டி, தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த ஆராவமுதனை, கட்சியினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், ஆராவமுதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் உடலை அனுப்பினர். போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதிகளில், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ரூ.1,000 லஞ்சம் வாங்கியவருக்கு 9 ஆண்டு சிறை
மதுரை மாவட்டம், பனையூர் ஊராட்சித் தலைவராக இருந்தவர் மாயாண்டி. இவர், 2014ல் தெரு விளக்குகள் அமைக்க மதிப்பீடு தயாரிக்க, பனையூர் மின் வாரிய உதவி பொறியாளராக இருந்த ராமமூர்த்தியிடம் விண்ணப்பித்தார். இதற்காக, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ராமமூர்த்தி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்டார்.
ராமமூர்த்திக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை, 1,500 ரூபாய் அபராதம் விதித்து, லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.
சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு சிறை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் 55.கூலி வேலை செய்து வருகிறார். இவர் 2016 டிச.19ல் அதே பகுதியைச் சேர்ந்த பாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்த 10 வயது சிறுமியை வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் காசிநாதனை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரத்ராஜ் ,காசிநாதனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 18 மாதம் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.
வாலிபரை கொலை செய்த தாய், மாமாவுக்கு ஆயுள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு சேனியர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி நாகேஸ்வரி 49. இவரது மகன் ஹரிஹரன் 23. இவர் பஸ் ஓட்டுனராக பணிபுரிந்தார். இவர் 2016ல் காதல் திருமணம் செய்து கொண்டார். ஹரிஹரனுக்கு குடிப்பழக்கமும் இருந்தது. அடிக்கடி குடும்பத்தாருடன் போதையில் தகராறு செய்தார்.
2016 ஜூலை 8ல் ஹரிஹரன் மது அருந்தி விட்டு தாயார் நாகேஸ்வரி மற்றும் தாய்மாமன் நாகராஜூடன் 45, தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமுற்ற நாகேஸ்வரி, நாகராஜ் இணைந்து ஹரிஹரனை கம்பியால் தாக்கி கொலை செய்தனர். இருவரையும் காரைக்குடி போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு சிவகங்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.பிரபாகர் ஆஜரானார். நாகராஜ் மற்றும் நாகேஸ்வரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதமும் நீதிபதி சத்தியதாரா விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
தொழிலதிபர் வீட்டில் 90 சவரன் நகை திருட்டு
சென்னை தி.நகர், சாரங்கபாணி தெருவைச் சேர்ந்தவர் பங்கஜ்குமார், 32; தொழிலதிபர். கடந்த வாரம், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, பங்கஜ்குமாரின் மனைவி நகை அணிய பீரோவை திறந்து பார்த்தார். அதில் செயின், கம்மல், வளையல், நெக்லஸ் என, 90 சவரன் நகை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடந்த இரு ஆண்டுகளாக இவரது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் விஜயலட்சுமி, 32, மீது சந்தேகம் வந்துள்ளது. இது குறித்து நேற்று முன்தினம் பங்கஜ்குமார், பாண்டி பஜார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நேற்று விஜயலட்சுமியிடம் விசாரித்த போது, பங்கஜ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து, விஜயலட்சுமி சிறுக சிறுக நகை திருடியது தெரிந்தது.
மேலும் திருடிய நகைகளை விஜயலட்சுமி, தன் கணவர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது சகோதரர் வருண்குமாரிடம் கொடுத்து வைத்ததும் தெரிந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.
சக அலுவலருக்கு செருப்படி; தீயணைப்பு ஊழியர் 'சஸ்பெண்ட்'
திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்தவர் காளிதாஸ், 55; திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தீயணைப்பு நிலைய அலுவலர். பிப்., 18ல் ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையத்தில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்று திரும்பிய போது, வாகனத்தில் பழுது ஏற்பட்டது.
பழுதை நீக்க வெள்ளகோவிலில் உள்ள தனியார் ஒர்க் ஷாப்புக்கு வாகனத்தை காளிதாஸ் கொண்டு சென்றார். அவருக்கு உதவும் வகையில், வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுசாமி, 53, உடன் சென்றார்.
பழுது நீக்குவது தொடர்பாக, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த வேலுசாமி, காளிதாசை தகாத வார்த்தைகளில் பேசி, தான் அணிந்திருந்த செருப்பால் அடித்துள்ளார். பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வேலுசாமியை 'சஸ்பெண்ட்' செய்து, கோவை மேற்கு மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குனர் சரவணகுமார் உத்தரவிட்டார்.
சிறுவனிடம் அத்துமீறல்: பெண்ணுக்கு 'போக்சோ'
சென்னை, ஆவடியைச் சேர்ந்த 40 வயது பெண், கணவரை பிரிந்து கூலி வேலை செய்து வருகிறார். இவரது 16 வயது மகனுக்கு, அதே பகுதியில் வசிக்கும் மாலா, 28, என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மாலாவுக்கு, ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்கள் கள்ளத்தொடர்பை அறிந்த சிறுவனின் தாய், இருவரையும் கண்டித்து உள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், மாலா வீட்டுக்கு சென்ற சிறுவன், வீடு திரும்பவில்லை.
இது குறித்து விசாரித்த ஆவடி மகளிர் போலீசார், காஞ்சிபுரத்தில் உள்ள பெண்ணின் தாய் வீட்டில் தலைமறைவாக இருந்த மாலா மற்றும் சிறுவனை மீட்டனர். விசாரணைக்கு பின், மாலாவை போக்சோவில் கைது செய்த போலீசார், திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
குண்டு வெடிப்பு குற்றவாளி விடுதலை
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பயங்கரவாதிகள் 1993ல் ரயில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர். இந்த ரயில் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீமை, போதிய ஆதாரம் இல்லாததால் அஜ்மீர் தடா நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டாலும், பார்லிமென்ட் தாக்குதல் உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளதால் அப்துல் கரீமின் சிறைவாசம் தொடர்கிறது.
திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக் கைது
பாலியல் பலாத்காரம் மற்றும் நில அபகரிப்பு புகாரில் சிக்கிய மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கை, 55 நாட்கள் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு பின், போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். இதையடுத்து, அவரை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்வதாக திரிணமுல் கட்சி அறிவித்துள்ளது.
ஏர் இந்தியாவுக்கு அபராதம்
மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தராததால் நடந்து சென்ற, 80 வயது பயணி உயிரிழந்த சம்பவத்தில், விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியாவுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
14 பேர் பலி
மத்திய பிரதேசத்தின் டின்டோரி மாவட்டத்தில் உள்ள அம்ஹாய் தேவ்ரி பகுதியை சேர்ந்த சிலர், வாகனம் ஒன்றில் மசூர்குக்ரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். இந்த வாகனம், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில், 14 பேர் பலியாகினர்; 20 பேர் காயம் அடைந்தனர்.
காசாவில் 70 பேர் பலி
மேற்கு காசா நகரில் உணவு கொண்டு வந்த லாரிகளை சுற்றி பாலஸ்தீனியர்கள் நேற்று திரண்டனர். உணவை பெற தள்ளுமுள்ளு ஏற்பட்டு கீழே விழுந்ததில் பலர் காயம் அடைந்தனர். அப்போது, 'ட்ரோன்'கள் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாகவும் இஸ்ரேல் படையினர் குண்டுகளை வீசினர். இதில், 70 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்; 280 பேர் காயம் அடைந்தனர்.

