ADDED : பிப் 08, 2025 06:40 PM

சென்னை: '' ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., கள்ள ஓட்டை போட்டு வெற்றி பெற்றதாகவும், அது போலி வெற்றி ,'' என தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: தமிழகத்தில் நடக்கும் கொலை சம்பவங்கள், வேதனை அளிக்கிறது. இது மோசமான ஆட்சி நடப்பதற்கு இதுவே சான்று. மக்கள் விரும்பி தேர்வு செய்ததால், டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினால், அது வரும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் விரைவில் வரும். உண்மை செய்திகள் வெளிவந்தால், அ.தி.மு.க., ஆட்சி தானாக வரும்.
'இண்டியா ' கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. அனைவரும் அதிகாரம் நிறைந்தவர்களாக உள்ளனர். இதனால், விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லை. மக்கள் மீது அக்கறை இல்லை. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில் இருக்கின்றனர். தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, ' இண்டியா' கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் வருகிறது.
காங்கிரஸ் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதை ஓட்டுகள் காட்டுகின்றன. இங்குள்ளவர்கள் தான் 'இண்டியா' கூட்டணி என தூக்கிப் பிடிக்கின்றனர். ஆனால், மற்ற மாநிலங்களில் இக்கூட்டணி லோக்சபா தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் சட்டசபை தேர்தலுக்கு பொருந்தாது என கூறிவிட்டனர். கூட்டணி ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் வெற்றி பெற முடியும். இனி இண்டியா கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களத்தில் யாருமே இல்லை. அங்கு தி.மு.க., பெற்றதுபோலி வெற்றி. அ.தி.மு.க.,வினர் ஓட்டை தி.மு.க., நிர்வாகிகள் போட்டு விட்டனர்.கள்ள ஓட்டு மூலம் அதிக ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றோம் என மமதையில் இருக்கிறார்கள். 2026ல் நடக்கும் தேர்தலில் என்ன நிலைமை ஏற்படும் என பார்ப்போம்.சட்டசபை தேர்தலில் நிச்சயம் பலமான கூட்டணி அமையும். தேர்தலுக்கு 13 மாதம் உள்ளது. வலுவான கூட்டணி அமையும். கவலைப்பட வேண்டாம். இன்னும் ஆறு மாதத்திற்கு பிறகு கூட்டணி உருப்பெறும்.
எங்கள் கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் ஒரே கொள்கை என ஸ்டாலின் சொல்கிறார். அப்படி என்றால், தனித்தனி கட்சிகள் எதற்கு. எங்களை பொறுத்தவரை கூட்டணி வேறு. கொள்கை என்பது வேறு. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமைக்கப்படுவது கூட்டணி. தேர்தல் முடிந்ததும், ஒவ்வொரு கட்சியும் அவரவர் கொள்கைப்படி செயல்பட முடியும்.
நெல்லையில் அல்வா சாப்பிட்டு மக்களுக்கு ஸ்டாலின் அல்வாவை கொடுத்துள்ளார். மிகப்பெரிய அல்வாவை கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.