மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க. அரசு; அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி
மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க. அரசு; அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி
ADDED : செப் 11, 2025 11:34 PM

உடுமலை: ''மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க., ஆட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி 'மக்களை காப்போம்; தமிழகம் மீட்போம்' பயணத்தில், மடத்துக்குளம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அவர் பேசியதாவது:
பி.ஏ.பி., திட்டத்தில் விடுபட்டுள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்ட, அ.தி.மு.க., ஆட்சியில், கேரளா அரசுடன் இரு கட்ட பேச்சு நடத்தி, உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கிடப்பில் போடப்பட்டது.
'இண்டி' கூட்டணி நாட்டுக்கு நல்லது செய்யும் என கூறும் ஸ்டாலின், கேரளாவிலுள்ள கம்யூ., அரசுடன் பேச்சு நடத்தி, அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால், விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டு வந்து, 6 ஆயிரம் பொதுப்பணித்துறை, 26 ஆயிரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான குளம், குட்டைகள் துார்வாரப்பட்டு, மழை நீர் சேமிக்கப்பட்டது.
மறு புறம் விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக வழங்கப்பட்டு, விளை நிலங்களும் வளமானது. இத்திட்டத்தையும் தி.மு.க., அரசு முடக்கியது.
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், குளம் குட்டைகள் மற்றும் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படும்.
ஒரு புறம் வேலைவாய்ப்பு இல்லாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசி, பருப்பு, எண்ணெய் என உணவு பொருட்கள் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், விலைவாசியை கட்டுப்பாட்டு நிதி ரூ.100 கோடி ஒதுக்கி, எந்த மாநிலங்களில் விலை குறைவாக உள்ளதோ, அப்பொருட்களை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
மின் கட்டணம் 67 சதவீதமும், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் 100 சதவீதம் உயர்ந்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சி அமைத்ததும், மூன்று ஆண்டாக மூடப்பட்டுள்ள அமராவதி சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கவும், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கவும், திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா கிளினிக், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் என தி.மு.க., அரசால் நிறுத்தப்பட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் மீண்டும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு, பேசினார்.