பேச்சு, பேட்டி, அறிக்கை: தி.மு.க., அரசுக்கு மனமில்லை
பேச்சு, பேட்டி, அறிக்கை: தி.மு.க., அரசுக்கு மனமில்லை
ADDED : மார் 08, 2024 12:31 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு:
'நிதி நிலை சீரானவுடன், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, தமிழக நிதி அமைச்சர் கூறியுள்ளார். நிதி செலவு உள்ள கோரிக்கைகளை வேண்டுமானால் தாமதப்படுத்தலாம். ஆனால், நிதி செலவே இல்லாத, மாதாந்திர வீட்டு மின் பயன்பாட்டு கணக்கெடுப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான, 'பீக் அவர்ஸ்' மின் கட்டண உயர்வு ரத்து ஆகியவற்றை கூட நிறைவேற்றாதது ஏன்? இதிலிருந்து, மக்கள் தலையில் சுமத்திய சுமையை கூட இறக்கி வைக்க, தி.மு.க., அரசுக்கு மனமில்லை என்பது தெளிவாகிறது.
மக்கள் தலையில் சுமை இருந்தால் தான், தங்களை நினைச்சிட்டே இருப்பாங்கன்னு மாத்தி யோசிக்கிறாங்களோ?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், மதுரை, சென்னை கொடுங்கையூர், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும், 108 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுக்கும், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு அவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இதில், தமிழக போலீசாருக்கு பதிலாக, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரித்தால் தான் உண்மைகள் அம்பலமாகும்.
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
இந்தியா ஒரு நாடல்ல என்று சொல்லும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை, இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் படி பதவியேற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் கைது செய்ய உத்தரவிடுவாரா? அப்படி உத்தரவிட மனமில்லை என்றால், தான் வகிக்கும் முதல்வர் பதவியை விட்டு விலகுவாரா?
யாரோ ஒரு ராஜா பேசியதற்கு எல்லாம், முதல்வர் பதவி விலக முடியுமா என்ன?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மாம்பட்டி கண்ணன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். எனவே, தமிழக அரசு அலட்சியத்தைக் கைவிட்டு, ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

