'தி.மு.க., அரசு இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக உள்ளது': இந்து முன்னணி குற்றச்சாட்டு
'தி.மு.க., அரசு இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக உள்ளது': இந்து முன்னணி குற்றச்சாட்டு
ADDED : ஜன 05, 2026 07:13 AM

கோவை: 'கடவுள் மறுப்பு கொண்ட தி.மு.க., அரசு, முழுக்க இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக இருக்கிறது' என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டி உள்ளார்.
கோவையில் நேற்று இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநாட்டில், காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை பெருநகரில் போலீசார் மாமூல் வசூலிப்பது, ரவுடிகள் மிரட்டுதல் காரணமாக இந்து வியாபாரிகளுக்குபாதுகாப்பற்ற சூழல் உள்ளது. அரசின் இலவசங்களை கண்டிக்கிறோம். கடந்த நான்கரை ஆண்டுகளில், ரூ.5 லட்சம் கோடிகளை, இந்த அரசு கடன் வாங்கியுள்ளது. பொங்கல் பரிசுத்தொகை பெறுவோர் பட்டியலை, மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்; அதிலும் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்ப டாததால், ஒருவர் தனது உயிரை தியாகம் செய்தார். சிதம்பரம் கோயிலில் ஒரு நக்சல் சிந்தனையுள்ள தி.க., காரர் 'நான்தான் சுவாமி' என பாலை எடுத்து தனது தலையில் ஊற்றியுள்ளார். இதை இந்த அரசு, காவல் துறை வேடிக்கை பார்க்கிறது. மலைக்கு மேலே ஆடு, கோழி வெட்ட அனுமதிக்கின்றனர்.
இந்த அரசானது நாத்திக அரசு; கடவுள் மறுப்பு கொண்டது. முழுக்க இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக இருக்கிறது. இந்த நான்கரை ஆண்டுகளில், 175க்கும் மேற்பட்ட கோவில்களை தி.மு.க., அரசு இடித்துள்ளது;மசூதி, சர்ச்களை இடிக்கவில்லை.
சட்ட விரோதமான சர்ச்கள் குறித்து, பட்டியல் கொடுத்தும் ஒரு நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. இந்து கோவில்களின் சொத்துக்களையும்,நிலங்களையும் இந்த அரசு அபகரிக்கதிட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வருகின்றன. இந்த அரசை கண்டிக்கிறோம். இவ்வாறு, கூறினார்.

