கோவில்களை விட்டு தி.மு.க., அரசு வெளியேறணும்: முருகன்
கோவில்களை விட்டு தி.மு.க., அரசு வெளியேறணும்: முருகன்
ADDED : செப் 01, 2025 05:56 AM

ஓசூர் : ''தி.மு.க., அரசு கோவில்களை விட்டு வெளியேற வேண்டும்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சதுர்த்தி விழாவுக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
இதையொட்டி ஓசூர் எம்.ஜி., ரோடு காந்தி சிலை அருகே, ஹிந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
மதுரை திருப்பரங்குன்றத்தில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பங்கேற்ற மாநாட்டை நடத்தி, தி.மு.க.,வுக்கு தோல்வி பயத்தை கொடுத்துள்ளோம்.
தமிழகத்தில் தி.மு.க., அரசின் தடைகளை தாண்டி, கிராமம் கிராமமாக ஒவ்வொரு பகுதியிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் சிறப்பாக நடக்கின்றன. சுதந்திரம் அடைந்த பின்பு கூட, விநாயகர் சிலையை உடைத்தனர்.
இப்போது, 60 ஆண்டுகளை கடந்து, 2 லட்சம் சிலைகள் கிராமம் தோறும் ஊர்வலம் நடக்கிறது. இதுதான், தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப் போவதற்கான அடையாளம்.
தி.மு.க., அரசு கோவில் நிலங்களை கொள்ளையடித்து வருகிறது. வருமானங்கள் மாற்றப்படுகின்றன. கோவில் நிலங்கள் சுரண்டப்படுகின்றன.
கோவில் நிலங்கள் மற்றும் வணிக இடங்கள் வாயிலாக வரும் வாடகை மறைக்கப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லா தி.மு.க., அரசு, கோவில்களை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.