முஸ்லிம்களை அரணாக நின்று தி.மு.க., அரசு காக்கும்: முதல்வர்
முஸ்லிம்களை அரணாக நின்று தி.மு.க., அரசு காக்கும்: முதல்வர்
ADDED : மார் 25, 2025 05:47 AM

சென்னை; ''இஸ்லாமியர்களுக்கு அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும்போது, அரண் போல் நின்று தி.மு.க., அரசு காக்கிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில், ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை திருவான்மியூரில் நேற்று நடந்தது.
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அண்ணாதுரையையும், கருணாநிதியையும் இணைக்கும் பாலமாக இருந்தது, இஸ்லாமியர் சமுதாயம் தான். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தார். அதை, அ.தி.மு.க., அரசு ரத்து செய்தது.
உள் இடஒதுக்கீடு
மீண்டும் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற பின், மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தார். முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி.
வக்பு வாரிய சொத்துக்களை பராமரிக்க மானியம் வழங்கியவர் கருணாநிதி. வக்பு வாரியத்திற்கு ஆண்டுதோறும் 2.5 கோடி ரூபாய் நிர்வாக மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக, 11,364 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் விதமாக, வக்பு வாரிய திருத்த மசோதாவை பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, அ.தி.மு.க., ஓட்டு போட்டது. அ.தி.மு.க., ஆதரிக்காமல் இருந்திருந்தால், குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறி இருக்காது.
உறுதுணை
மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதை, காலங்காலமாக தி.மு.க., எதிர்க்கிறது.
இஸ்லாமியர்களுக்கு அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும்போது, அரண் போல் நின்று தி.மு.க., அரசு காக்கிறது. சிறுபான்மையின மக்களின் அரசியல் உரிமையை நிலைநிறுத்த, தி.மு.க., அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.