ஊடக சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்
ஊடக சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்
ADDED : ஜன 25, 2024 01:46 PM

சென்னை: தினமலர் நாளிதழ் மீது போலீசார் வழக்கு தொடர்ந்ததைக் கண்டித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் இது போன்ற அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது' எனத் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை, நேரடி ஒளிபரப்பு செய்ய, திமுக அரசு தடை செய்து உத்தரவிட்டதாக, நமது தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இதனை எதிர்த்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், மதுரை மேலமாசி வீதி மதனகோபால் சுவாமி கோவில் செயல் அலுவலர் அளித்த புகாரில் தினமலர் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை, தமிழகக் கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, திமுக அரசு தடை செய்து வாய்மொழியாக உத்தரவிட்டதை, தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இதனை அடுத்து, தினமலர் நாளிதழ் ஆசிரியர் மீது, மதுரை போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
அறநிலையத் துறை அதிகாரிகள் இந்தத் தடை குறித்து தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள், கோவில்களுக்கு வந்த பக்தர்களைத் தடுத்த செய்திகள் என பல ஆதாரங்கள் உள்ள நிலையிலும், திமுக அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்வது ஊடகங்களின் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. அனைத்து ஊடகங்களும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று திமுக எதிர்பார்ப்பது வேடிக்கை.
அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசு, பொதுமக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் இது போன்ற அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.