ADDED : ஜூலை 04, 2024 12:43 PM

திருச்சி: ''தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையில் உருது பள்ளிகளை அதிகம் கொண்டுவர வேண்டும், உருது பாடப்புத்தகங்களை கொண்டுவர வேண்டும் என்கின்றனர். ஹிந்தி திணிப்பு என்று கூறும் திமுக அரசு, உருது பள்ளிகளை அதிகம் கொண்டுவர நினைப்பது ஏன்? இது உருது திணிப்பு இல்லையா?'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சியின் அத்துமீறல் அதிகமாக இருக்கும். விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். அதையும் மீறி தே.ஜ., கூட்டணியின் பாமக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் என்றால் ஒரு கட்சி தைரியமாக நிற்க வேண்டும். ஆனால் நாங்கள் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கி இருக்கிறது.
திமுக என்ற 'ஏ' டீம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக 'பி' டீம் ஆன அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இடைத்தேர்தலில் 3வது, 4வது இடம் வந்துவிடும் என்ற அச்சத்திலும் புறக்கணித்துள்ளது. பாமக வென்றால் ஆட்சி மாற்றம் ஏற்படாது; ஆனால் மக்களின் அதிருப்தி வெளிப்படும். நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த திமுக அரசு, நாங்கள் கேட்ட வெள்ளை அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்?
திமுக சார்ந்த அரசியல்
பா.ஜ.,வை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே நீட்டை எதிர்க்கின்றனர். நீட் குறித்து கருத்து சொல்ல நடிகர் விஜய்க்கு உரிமை உண்டு. அவர் ஒன்றிய அரசு என பேசுவது, திமுக சார்ந்த அரசியலை கையில் எடுப்பது போல் உள்ளது. திமுக.,வின் அரசியலை அனைவரும் கையில் எடுத்தால் எங்கள் கட்சி தனித்திருக்கும்; அது எங்களுக்கு சந்தோஷம் தான்; எங்கள் கட்சி வளர்ச்சிக்கு அது உதவும்.
2020ம் ஆண்டு வரை தேசிய பாட திட்டத்தில் ஹிந்தி கட்டாய மொழியாக இருந்தது. தமிழக மக்கள் மும்மொழி கொள்கையை விரும்புகின்றனர். தேசிய கல்வி கொள்கையை கட், காப்பி, பேஸ்ட் செய்து மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மாநில கல்வி கொள்கையில் உருது பள்ளிகளை அதிகம் கொண்டுவர வேண்டும், உருது பாடப்புத்தகங்களை கொண்டுவர வேண்டும் என்கின்றனர். ஹிந்தி திணிப்பு என்று கூறும் திமுக அரசு, உருது பள்ளிகளை அதிகம் கொண்டுவர நினைப்பது ஏன்? இது உருது திணிப்பு இல்லையா?
அதிமுக
தமிழகத்தில் அவர் நாமம் வாழ்க, இவர் நாமம் வாழ்க எனக் கூறிக்கொண்டு பாதி பேர் சுற்றி வருகின்றனர். அவர்களால் தான் இந்த அரசியலுக்கு பீடை பிடித்துள்ளது. 1980, 90களில் தலைவர்களுக்கு போட்ட ஓட்டை வாங்கி இன்னும் அதிமுக என்ற கட்சி உயிரோடு இருக்கிறது. அக்கட்சியின் அழிவுக்கு முதல் காரணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
வெளிநாட்டில் படிப்பு
எனக்கு படிக்க பிடித்திருப்பதால் வெளிநாட்டில் படிக்க போகிறேன். அரசியலில் இருக்கும்போது உங்களை மெருக்கேற்றிக்கொள்ளும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. பா.ஜ.,வில் அண்ணாமலை சென்றுவிட்டால், வேறு யாரோ ஒருவர் என்னைவிட சிறப்பாக செய்யதான் போகிறார். நான் சென்றுவிட்டால், அதிமுக இழந்த இடத்தை பிடித்துவிடலாம் என்பதெல்லாம் பகல் கனவு.
ஆர்.எஸ்.பாரதி
கள்ளச்சாராய விவகாரத்தில் என் மீது அவதூறு பரப்பிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இதனை வரும் ஜூலை 9ல் வழக்காக பதிவு செய்ய உள்ளேன். அதுமட்டுமல்லாமல் நாய் கூட பி.ஏ பட்டம் பெறுவதாக பேசியுள்ளார். தேர்வு எழுதாமல் ஸ்டாலின், உதயநிதியை போல பட்டம் வாங்குவதாக நினைத்துவிட்டார். திமுக என்ற கட்சியே சரியில்லை. மேயரை மாற்றிவிட்டால் என்ன ஆகப்போகிறது?. எல்லா மேயரையும் நீக்கினால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.