கொரோனா வந்தால் தான் எங்களை நினைப்பீர்களா ? அரசு டாக்டர்கள் ஆதங்கம்
கொரோனா வந்தால் தான் எங்களை நினைப்பீர்களா ? அரசு டாக்டர்கள் ஆதங்கம்
ADDED : ஆக 05, 2024 01:16 PM

சென்னை: மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி 6 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,
நீண்டகாலமாகவே இங்கு கிடப்பில் போடப்பட்டுள்ள அவர் தந்த அரசாணைக்கு (GO. 354) உயிர் கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி 6 ம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற 7 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் கடந்த ஓராண்டு நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர். குறிப்பாக அவரது பெயரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இருப்பினும் அரசு மருத்துவர்களுக்காக அவர் வெளியிட்ட அரசாணை 354 ஐ அமல்படுத்தும் நடவடிக்கையை மட்டும் மேற்கொள்ளவில்லை. இத்தனைக்கும் திமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றுவதாக, முதல்வர் நம்மிடம் உறுதியளித்த கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாகவே உள்ளது.
அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அரசு மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் 4 மாதங்கள் கடந்த பின்னரும், திமுக ஆட்சியில் கலைஞரின் அரசாணைக்கு தடை போடப்படுவதை எதிர்பார்க்கவில்லை.
கோவிட் காலத்தில் டாக்டர்கள் பலர் தங்களின் உயிரை பணையம் வைத்து பணியாற்றினார்கள். அந்நேரத்தில் அரசும், மக்களும் மருத்துவர்களை வெகுவாக பாராட்டினர். ஆனால் எங்களின் கோரிக்கைகளை தற்போது ஏற்க மறுப்பது சரியா ?
எங்களையும் கொஞ்சம் கவனியுங்க
எனவே வரும் 7 ம் தேதி கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்க தமிழக முதல்வரை வேண்டுகிறோம். மேலும் திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை வழங்கிடவும் வேண்டுகிறோம். இதன் மூலம் கருணாநிதி நினைவு தினம் அரசு மருத்துவர்கள் வாழ்வில் திருப்பு முனையாகவும், மறக்க முடியாத நிகழ்வாகவும் அமையும். மேலும் அரசு மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழிவகுப்பதோடு, சுகாதாரத் துறையை இன்னும் சிறப்பாக அருத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.