'ராமர் கோவில் திறப்பிற்கு தி.மு.க., எதிர்ப்பு இல்லை'
'ராமர் கோவில் திறப்பிற்கு தி.மு.க., எதிர்ப்பு இல்லை'
UPDATED : ஜன 19, 2024 10:35 AM
ADDED : ஜன 19, 2024 01:56 AM

சென்னை:''ராமர் கோவில் செல்வது, அவர் அவர் விருப்பம். ராமர் கோவில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ, தி.மு.க., என்றைக்கும் எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு, கோவில் கட்டியதால் தான், தி.மு.க.,விற்கு உடன்பாடு இல்லை,'' என, அமைச்சர் உதயநிதி கூறினார்.
தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை, சென்னையில் நேற்று உதயநிதி துவக்கி வைத்து பேசியதாவது:
நான் இளைஞரணி செயலராக பொறுப்பேற்று, சட்டசபை தொகுதிக்கு, 10,000 பேர் வீதம், 25 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்த்துள்ளோம். அதேபோல், 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தி முடித்தோம். இப்போது இல்லம்தோறும் இளைஞரணி நிகழ்ச்சி நடத்தி, வீடு வீடாக சென்று இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்தோம்.
முக்கிய பணியாக, வரும் 21ம் தேதி சேலத்தில், கட்சியின் இளைஞர் அணி 2வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் பெயர், மாநில உரிமைகள் மீட்பு மாநாடு. கடந்த ஒன்பது ஆண்டுகளாக, நம் மாநில உரிமைகள் அத்தனையும் இழந்திருக்கிறோம். மாநாட்டில், 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு, மூன்று வேளைகளும் உணவு வழங்கப்படும்.
கட்சியினர் அனைவரும் மாநாட்டில் குடும்பத்தோடு பங்கேற்று, மாநாட்டுக்கு பெருமை தேடி தர வேண்டும். வரும் 20ம் தேதி மாலை, முதல்வர் மாநாட்டு திடலுக்கு வருகிறார். தமிழகம் முழுவதும், இளைஞரணி மாநாட்டை விளக்கி சொல்வதற்காக, 500 மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டர்களை முதல்வரை சந்திக்க உள்ளார்.
வரும் 21ம் தேதி காலை 8:30 மணிக்கு, மாநாடு கொடியை துணைப் பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., ஏற்றி வைக்கிறார். மாநாட்டில், 21 பேச்சாளர்கள் பேசுகின்றனர். 'நீட்' தேர்வுக்கு எதிராக, 85 லட்சம் கையெழுத்து வாங்கியுள்ளோம். அதன் படிவங்களை மாநாட்டில் முதல்வரிடம் வழங்க உள்ளோம். பின், ஜனாதிபதியை சந்தித்து வழங்க இருக்கிறோம். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
இளைஞரணி புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மாலை 5:00 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தமிழகத்தை மட்டுமல்ல; இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால், அதற்கும் தி.மு.க., இளைஞரணி தான் முன்களத்தில் நின்று பாடுபடும். இவ்வாறு உதயநிதி பேசினார்
தவழ்ந்து தவழ்ந்து போவதால் பழனிசாமிக்கு காலில் வலி
பின், உதயநிதி அளித்த பேட்டி: ராமர் கோவில் செல்வது, அவர் அவர் விருப்பம். ராமர் கோவில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ தி.மு.க., என்றைக்கும் எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு, கோவில் கட்டியதால் தான் தி.மு.க.,விற்கு அதில் உடன்பாடு இல்லாமலிருக்கிறது.
ஏற்கனவே, டி.ஆர்.பாலு, ஆன்மிகத்தையும்; அரசியலையும் ஒன்றுபடுத்த வேண்டாம் என, கூறியுள்ளார். கால் வலி காரணமாக ராமர் கோவில் திறப்பு விழாவில் பழனிசாமி பங்கேற்கவில்லை. அவர் தவழ்ந்து தவழ்ந்து போவதால், அவருக்கு அடிக்கடி காலில் வலி ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
![]() |
![]() |
![]() |




