ஆதார், ரேஷன் கார்டு தேர்தல் ஆவணமாக சேர்க்க தி.மு.க., வலியுறுத்தல்
ஆதார், ரேஷன் கார்டு தேர்தல் ஆவணமாக சேர்க்க தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 27, 2025 04:16 AM

சென்னை: ''தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள, 11 ஆவணங்களும் சாதாரணமான மக்களிடம் இருப்பதில்லை. எனவே, தமிழகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை அவசியம் இணைக்க வலிறுத்தியுள்ளோம்,'' என, தி.மு.க., மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்
அவர் அளித்த பேட்டி:
தி.மு.க, வழக்கறிஞர் அணி சார்பில், மாவட்ட அளவில், சட்டசபை தொகுதி அளவில், 7 பகுதிகளாக பிரித்து, வழக்கறிஞர்களை நியமித்து, அவர்களுக்கான பயிற்சி வகுப்பு அறிவாலயத்தில் நடந்தது.
பீஹாரில் நடக்கும் பிரச்னைகளை, 'இண்டியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தெளிவாக எடுத்து சொல்லி உள்ளன. குறிப்பிட்ட பிரிவினரை மட்டும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய சூழச்சியாகவே, இதை 'இண்டியா' கூட்டணி பார்க்கிறது.
ஓட்டு போடுவதற்கு அனுமதிக்கப்படும் வகையில், தேர்தல் கமிஷன், 11 ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது. இது இல்லாமல், கூடுதல் ஆவணங்களையும் எடுத்துக் கொள்வோம் என்கிறது. ஆதார் அட்டையை ஆதாரமாக எடுத்துக் கொள்ள சொல்லியும், தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.
கமிஷன் குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களும் சாதாரணமான மக்களிடம் இருப்பது கிடையாது. தமிழகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை, அந்த பட்டியில் இணைக்க வலிறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

