திட்டமிட்டு தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
திட்டமிட்டு தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ADDED : டிச 06, 2024 12:16 PM

சென்னை: 'அரசின் செயல்பாடு தெரிந்தாலும் திட்டமிட்டு தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது' என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, எழும்பூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அம்பேத்கருக்கு நிகரான தலைவர் வேறு யாரும் இல்லை. அம்பேத்கர் காட்டிய பாதையில் திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது. தூய்மை பணியாளர் என கூறுவதை விட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூறலாம். தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்பதே சரி. மருத்துவ காப்பீடு அட்டை கிடைப்பதில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
நற்பெயர்
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். தூய்மைப் பணிகள் இயந்திர மயமாக்கப்பட்டு உள்ளன. ஆதி திராவிடர் மக்களுக்கான திட்டங்கள் எனது ஆட்சியைப் போன்று எந்த ஆட்சியிலும் செயல்படுத்தப்படவில்லை. நல வாரியத்தில் பதிவு செய்த தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதிகாரிகள், போலீசார், தூய்மை பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதால் அரசுக்கு நற்பெயர் கிடைக்கிறது.
களங்கம்
பட்டியலின மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அரசின் செயல்பாடு தெரிந்தாலும் திட்டமிட்டு தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. மத வெறி, சாதி வெறி சக்திகளின் எண்ணம் இந்த மண்ணில் நான் இருக்கும் வரை நிறைவேறாது. சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை அம்பலப்படுத்தி சமூகநீதியை நிலைநாட்டுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.